‘கருப்பு’ திரைப்படத்தில் தனது காட்சிகள் நீக்கப்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்த நடிகர் மன்சூர் அலிகான், தன்னை ஏன் இப்படி ஓரங்கட்டுகிறீர்கள் என்று வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார். தனது மகன்கள் இதுகுறித்து கேட்பதாகவும், அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை என்றும் அவர் உருக்கமாக தெரிவித்தார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் மன்சூர் அலிகான், மேடையில் பேசும்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது:
“நான் என்ன பிச்சை எடுக்கவா சினிமாவில் நடிக்கிறேன்? என்னை ஏன் இப்படி ஒரு பொருட்டாக மதிக்காமல் நிற்க வைக்கிறீர்கள்? ‘கருப்பு’ படத்தில் எனது காட்சிகளை ஏன் நீக்கினீர்கள்? இப்போது எனது மகன்கள் என்னிடம் வந்து கேட்கிறார்கள், ‘அப்பா, உங்கள் காட்சிகள் ஏன் படத்தில் இல்லை?’ என்று. அதற்கு நான் என்ன பதில் சொல்வது? நான்தான் உண்மையான ‘கருப்பன்’.
இந்த சினிமா துறையில் பல நடிகர்கள் அரைக்கால் டிராயர் அணியும் வயதில் நான் ஒரு தயாரிப்பாளராக இருந்தவன். 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அப்படிப்பட்ட என்னை, ஒரு தயாரிப்பாளரை, ஒரு நடிகரை, இப்படி ஒரு டம்மியாக நிற்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்? இன்று பல ஹீரோக்கள் வெறும் பில்டப் மூலம் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் அப்படிப்பட்டவன் அல்ல.
நான் மிகவும் கஷ்டப்பட்டு, ரிங்க் மேலே நின்று, பாட்டில்களை வீசிக்கொண்டு நடனமாடி நடித்த எனது காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. சூர்யாவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, பில்டப் காட்சிகள் வைக்கும்போது, நான் கஷ்டப்பட்டு ஆடிய அந்த 2 முதல் 4 நிமிட காட்சிகளையாவது வைத்திருக்கலாம் அல்லவா? இது எந்த வகையிலும் நியாயமில்லை. இதுபோன்று பல நடிகர்களின் உழைப்பும், உழைப்பின் பலனும் முறையாக அங்கீகரிக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
என் மகன் ஏதோ ஒரு கல்லூரி மாணவன் கொடுத்த ஒரு தவறை செய்துவிட்டான். அதற்காக இன்னமும் என்னை எல்லோரும் அதைச் சொல்லியே விமர்சிக்கிறார்களே. நான் என்ன நல்ல காரியம் செய்தாலும், அதைச் சுட்டிக்காட்டி பேசுகிறார்கள். சமூக வலைதளங்களில் என்னையும், என் மகனையும் பற்றி தவறாகப் பேசுபவர்கள் ஒரு அழுக்குக் கூட்டம்.
இன்று பல திரைப்படங்களின் விளம்பரங்களிலும், போஸ்டர்களிலும் கதாநாயகர்களின் பெயர்கள் மட்டுமே பிரம்மாண்டமாக இடம்பெறுகின்றன. ஆனால், அந்தப் படங்களின் வெற்றிக்குக் காரணமான ஒளிப்பதிவாளர், எடிட்டர், கலை இயக்குநர், பாடலாசிரியர்கள் மற்றும் துணை நடிகர்களின் பெயர்கள் கூடத் தெரியாத அளவுக்கு மிகச்சிறிய எழுத்துகளில் ஓரம் கட்டப்படுகின்றன. இது சினிமா துறையில் நடக்கும் ஒரு பெரும் அநீதி” என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.
