கூவம் ஆற்றைக் கடந்து சென்றீர்களா? – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் கேள்வி

தமிழக ஆளுநர் வைகை ஆற்றைக் கடக்கும்போது, ஆற்றில் நீர் இல்லாததைக் கண்டு வேதனைப்பட்டு, 'உடனடியாகச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாவிட்டால், ஆளுநர் மாளிகையே நேரடியாக களத்தில் இறங்கும்' என்று கூறியதாக சு. வெங்கடேசன் எம்பி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: 'ஆளுநர் அவர்களே, கடந்த வாரம் தமிழகச் சட்டமன்றத்தில் உரையாற்றச் சென்றபோது, கூவம் ஆற்றைக் கடந்துதானே சென்றீர்கள்? அங்கே ஆற்று நீர் தெள்ளத்தெளிவாக ஓடிக்கொண்டிருந்ததா? அங்கு ஆளுநர் மாளிகை களத்தில் இறங்க வேண்டிய தேவை ஏதும் ஏற்படவில்லையா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், 'ஆளுநர் மாளிகை நேரடியாகத் தலையிடும் என்று நீங்கள் கூறுவதன் நோக்கம் பிரச்சனையை தீர்ப்பதற்கல்ல, மாறாக ஓர் இணையாட்சி நிர்வாகத்தை உருவாக்கவே. ஆளுநர்களின் அரசியல் நோக்கங்களை முறியடித்த வரலாறு கொண்டதுதான் தமிழ்நாடு. சந்தேகம் ஏதும் இருந்தால் ஆர் என் இரவியிடம் கேட்டுப்பாருங்கள்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version