தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைய உள்ள விமானப் பயிற்சி மையத்தின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (TIDCO) முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கயத்தாறு வட்டம் தோணுகால் பகுதியில் இந்த ‘பிளையிங் ட்ரைனிங் ஆர்கனைசேஷன்’ (FT0) அமைய உள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகளின் தரம், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் திட்ட முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து ஆலோசனை வழங்க, ஒரு சுயாதீன பொறியாளரை தேர்வு செய்வதற்கான மின்னணு டெண்டர் அறிவிப்பை TIDCO வெளியிட்டுள்ளது. தகுதியான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. டெண்டர் ஆவணங்களை TIDCO மற்றும் தமிழ்நாடு அரசின் மின்னணு டெண்டர் இணையதளங்களில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற ஜூலை 15ஆம் தேதி மதியம் 3 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விமானப் பயிற்சி மற்றும் விமானத் துறை சார்ந்த உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கிய திட்டங்களில் ஒன்றாக இந்த கோவில்பட்டி விமானப் பயிற்சி மையம் கருதப்படுகிறது.
இந்த திட்டம் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் உயர்தரத்துடன் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்காகவே சுயாதீன பொறியாளர் நியமனத்திற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக TIDCO தெரிவித்துள்ளது. இந்த விமானப் பயிற்சி மையம் செயல்பாட்டுக்கு வந்தால், தென் தமிழக இளைஞர்களுக்கு விமானப் பயிற்சி பெறும் புதிய வாய்ப்புகள் உருவாகும். மேலும், அப்பகுதியின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் இது ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
