சேலம்: கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர பா.ஜ.க. உறுதியாக இருக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்துள்ள கொளத்தூரில் உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்குச் சென்ற தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரனுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன், சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர பா.ஜ.க. உறுதியாக இருக்கும்' என சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்ததாகக் கூறினார்.
மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க பா.ஜ.க. துணை நிற்கும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்தச் சந்திப்பின்போது, சேலம் மாவட்ட தலைவர் ஹரிராமன், சுற்றுச்சூழல் பிரிவு மாநில அமைப்பாளர் கோபிநாத் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சமூக விரோதிகளால் கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள் குறித்தும், குற்றவாளிகள் மீது எடுக்கப்படும் சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

