தமிழகத்திற்கு அடுத்த மெகா முதலீடு வரவுள்ளது. தென்கொரியாவின் முன்னணி நிறுவனமான மோட்டிலிங்க், தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.
தென்கொரியாவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சியோலில் உள்ள மோட்டிலிங்க் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் நடவடிக்கைகள் குறித்தும், தமிழகத்தின் தொழில் சூழல் குறித்தும் எடுத்துரைத்தார்.
வாகன மின்னணுவியல் துறையில் முன்னணியில் உள்ள மோட்டிலிங்க் நிறுவனம், ஹூண்டாய் மற்றும் கியா போன்ற நிறுவனங்களுக்கு முக்கிய விநியோகஸ்தராகவும் திகழ்கிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் தனது உற்பத்தி ஆலையை விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது.
தமிழகத்தின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள், திறமையான பணியாளர்கள் ஆகியவற்றை தொடர்ந்து முதலீட்டாளர்கள் விரும்புவதாகவும், இது தமிழகத்தை முதலீடுகளுக்கு உகந்த இடமாக வலுப்படுத்துவதாகவும் அமைச்சர் கீர்த்தனா தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.