சென்னை: கொளத்தூர் தொகுதியில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என திமுக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பதற்கான அறிவியல் மற்றும் சட்டப்பூர்வ ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறினார். ஆய்வு செய்யப்பட்ட 8 வாக்குப்பதிவு இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றும், இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையைப் பெற்று நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், கொளத்தூர் தொகுதியில் 157-வது வாக்குச்சாவடியில் உள்ள இயந்திரங்களை சரிபார்க்கும் போது, 4 இயந்திரங்களில் இருக்க வேண்டிய 7 டேக்குகள் புதிதாகவும், விவரங்கள் ஏதும் இல்லாமலும் இருந்தன. முகவரி நிரப்பப்படாமல் காலியாக இருந்தன. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, மனிதத் தவறு என பதிலளித்ததாகக் குறிப்பிட்டார்.
மொத்தம் 8 வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சோதித்ததில், 3 இயந்திரங்களில் குளறுபடிகள் இருந்ததை உறுதி செய்துள்ளதாக என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார். EVM கருவிகள் சரியாக இயங்குகின்றனவா என்பதை அறிய, திமுக சட்டத்துறை சார்பில் வழக்குத் தொடுத்ததன் அடிப்படையிலேயே தமிழ்நாடு முழுவதும் 5 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
ஆனால், கொளத்தூர் தொகுதியில் வாக்கு இயந்திரங்களைச் சரிபார்க்கும் போதே, இயந்திரக் கோளாறு என பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக பாதுகாக்கப்படவில்லை என்றும், இதன் மூலம் இந்தத் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பது தெளிவாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அறிவியல் பூர்வமாக தேர்தல் அதிகாரிக்கும், வாக்கு இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனத்திடமும் 19 கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் என்.ஆர்.இளங்கோ கூறினார். கொளத்தூர் தொகுதியில் வாக்கு இயந்திரங்களை ஆய்வு செய்ததில், 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்பது இதுவரை கிடைத்திருக்கும் ஆதாரங்களை வைத்தே தெரிகிறது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஆலோசித்து, விரைவில் நீதிமன்றத்தை நாடுவோம் என வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
