பிரிட்டனின் வொர்செஸ்டர்ஷைர் மாகாணத்தில், மருத்துவமனைக்குச் செல்ல முடியாத அவசரச் சூழலில் கேஎப்சி உணவகத்தின் வாகன நிறுத்தத்தில் குழந்தை ஒன்று பிறந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதான கேட்டி மர்பி மற்றும் அவரது பங்குதாரர் ஸ்டீபன் கிர்பி தம்பதியினர், குழந்தை பிறப்புக்காக மருத்துவமனைக்கு காரில் விரைந்து கொண்டிருந்தபோது, வழியிலேயே கேட்டி மர்பிக்கு பிரசவ வலி தீவிரமடைந்துள்ளது.
மருத்துவமனைக்குச் செல்லப் போதுமான நேரம் இல்லை என்பதை உணர்ந்த ஸ்டீபன் கிர்பி, உடனடியாக அருகில் இருந்த கேஎப்சி உணவகத்தின் வாகன நிறுத்தத்தில் காரை நிறுத்தினார். இதுகுறித்து கேட்டி மர்பி கூறுகையில், 'ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு எங்கள் இருப்பிடத்தைச் சொல்ல முயன்றோம்; ஆனால் எங்களுக்குத் தெரிந்த ஒரே அடையாளம் அந்த கேஎப்சி கடை மட்டுமே' என்றார். நிலைமை கைமீறிச் சென்றதால், ஸ்டீபன் கிர்பி காரின் கதவைத் திறந்து பயணியின் இருக்கைக்கு வந்து, தனது பச்சிளம் மகனைச் சரியாகப் பிடித்துத் தாங்கிக் கொண்டார்.
அதிர்ஷ்டவசமாக, ஸ்டீபன் கிர்பி குழந்தையைப் பத்திரமாகப் பிடித்த நிலையில், சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் விரைந்து வந்து தாயையும் சேயையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்களது செய்தி அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். மேலும், இந்தச் சம்பவத்தைக் கொண்டாடும் விதமாக மருத்துவமனை ஊழியர்கள் கேஎப்சி உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டதுடன், குழந்தையின் முதலாம் ஆண்டு பிறந்தநாளுக்குக் கேஎப்சி-யிலேயே கொண்டாடுவோம் என நகைச்சுவையாகத் தெரிவித்தனர்.
குழந்தைக்கு 'கோடி' எனப் பெயரிடப்பட்டாலும், கேஎப்சி நிறுவனத்தின் நிறுவனர் கர்னல் சாண்டர்ஸைக் குறிக்கும் வகையில் குடும்பத்தினரும் நண்பர்களும் குழந்தைக்கு 'கர்னல் கோடி' என செல்லப் பெயர் சூட்டியுள்ளனர். இதுகுறித்து தாயார் கேட்டி மர்பி கூறுகையில், 'என் வாழ்நாளில் நான் எதிர்பார்த்த பிரசவம் இதுவல்ல; என்றாலும் இது பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. பிற்காலத்தில் தன் பள்ளி நண்பர்களிடம் சொல்ல இவனுக்கு ஒரு விசித்திரமான கதை கிடைத்துள்ளது' என்றார்.
இந்த விசித்திரமான பிறப்புச் செய்தி பிரபல கேஎப்சி நிறுவனத்தின் கவனத்திற்கும் சென்றது. இதுகுறித்து நிறுவனத்தின் பேச்சாளர் கூறுகையில், 'கோடி பிறந்த இடமாக எங்களது கடை அமைந்திருப்பது எங்களுக்குப் பெருமை அளிக்கிறது. அக்குடும்பத்தினருக்கு எங்களது அன்பையும், பரிசுகளையும், சிறப்பு வவுச்சர்களையும் அனுப்புகிறோம். அவர்களை மீண்டும் எங்கள் உணவகத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்' எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் பலரால் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டாலும், ஒரு தாய் தன் குழந்தையைப் பெற்றெடுத்த தருணம் மறக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

