கேரள மாநிலத்தின் 'விஷு பம்பர்' லாட்டரி சீட்டு குலுக்கலில், லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வந்த பொன்னன் என்ற தொழிலாளிக்கு ரூ.12 கோடி முதல் பரிசு கிடைத்துள்ளது. இந்த எதிர்பாராத அதிர்ஷ்டம் குறித்து பொன்னன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
பல ஆண்டுகளாக சாலையோரம் நின்று லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாகவும், சில சமயங்களில் தனக்காகவும் டிக்கெட்டுகள் வாங்குவது வழக்கம் என்றும் பொன்னன் தெரிவித்தார். இந்த முறை விற்பனைக்காக கொண்டு வந்த டிக்கெட்டுகளில், தனக்குப் பிடித்தமான '2' என்ற எண்ணில் முடிந்த ஒரு டிக்கெட்டை தனக்காக எடுத்துக்கொண்டதாகவும், அதுவே தனக்கு பெரும் அதிர்ஷ்டத்தை தேடித் தந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
வறுமையில் வாடும் குடும்பத்தில் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமைவது கடினம் என்றும், தற்போது தங்களிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதால், தனது மகன் வினோத்திற்கு நல்ல குடும்பத்தில் பெண் பார்த்து, சிறப்பாக திருமணம் செய்து வைப்பேன் என்றும் பொன்னன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்ததால், பொன்னன், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் இணைந்து லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் பணவரவு அவர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

