கார்த்திகை மாதத்தில் சிவனுக்கும் முருகனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்வது மிகுந்த பலனைத் தரும். சிவ பெருமான், மகாவிஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு இடையே யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டபோது, ஜோதிப்பிழம்பாக திருவண்ணாமலையில் தோன்றினார். அந்த மலையே அண்ணாமலை என அழைக்கப்படுகிறது. சிவ பெருமான் ஜோதி வடிவில் காட்சி அளித்த மாதம் கார்த்திகை என்பதால், இந்த மாதம் சிவனுக்கும், கார்த்திகேயனுக்கும் உகந்ததாகக் கருதப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் இணையும் நாளில், இறைவனை ஜோதி வடிவில் வழிபடும் திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து, சிறப்பு முறையில் விளக்கேற்றி சிவ மற்றும் முருகப் பெருமானின் அருளைப் பெறலாம்.
கார்த்திகை விரதம் இருப்பவர்கள், பரணி நட்சத்திரம் அன்று இரவே விரதத்தைத் தொடங்க வேண்டும். திருக்கார்த்திகை அன்று அதிகாலையில் எழுந்து, தலைக்குக் குளித்துவிட்டு, வீட்டில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்க வேண்டும். பகல் முழுவதும் உபவாசம் இருக்கலாம் அல்லது பழங்கள், பழச்சாறுகள் மட்டும் அருந்தி விரதத்தைத் தொடரலாம்.
மாலையில், திருவண்ணாமலையில் அண்ணாமலையார் அர்த்தநாரீஸ்வரராக மூன்று நிமிடங்கள் காட்சி தருவார். அவரது தரிசனம் கிடைத்தவுடன், மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். அதைக் கண்டதும், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்று கூறி, முதலில் நமது வீட்டு வாசலில் தீபம் ஏற்ற வேண்டும். பின்னர் பூஜை அறையிலும், அதன் பிறகு வீட்டின் மற்ற இடங்களிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். பூஜை செய்து, மாலை 6 மணிக்கு மேல் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
வீட்டில் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். அவற்றில் ஒரு தீபமாவது நெய் தீபமாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு கார்த்திகை திருநாளன்று பிரதோஷமும் இணைந்து வருவதால், மாலையில் திருவாசகம், சிவபுராணம், சிவ அஷ்டகம் படிப்பது சிறப்பு. மேலும், முருகப் பெருமானுக்குரிய திருப்புகழ், கந்தர் அலங்காரம் போன்றவற்றையும் படிக்கலாம்.
சிவ பெருமானுக்கு கார்த்திகை அன்று கார்த்திகை பொரி, அப்பம் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம். திருக்கார்த்திகை அன்று ஒருவருக்காவது அன்னதானம் செய்வது, கங்கை கரையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளித்த பலனைத் தரும்.
பரணி தீபத்தன்று பூஜை அறையில் ஐந்து தீபங்கள் ஏற்ற வேண்டும். திருக்கார்த்திகை அன்று வீடு முழுவதும் மொத்தம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். முதலில் வாசலிலும், பிறகு பூஜை அறையிலும் விளக்கேற்ற வேண்டும். பூஜை அறையில் வழக்கமாக ஏற்றும் தீபங்களுடன் கூடுதலாக இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும்.
சமையலறை, ஹால், படுக்கை அறை, பால்கனி, வீட்டின் பின்புறம் என வீட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தலா 2 விளக்குகள் ஏற்ற வேண்டும். சிறிய வீடாக இருப்பவர்கள் தங்களின் வீட்டின் கூடத்தில் முடிந்த அளவிற்கு விளக்குகள் ஏற்றலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இறைவனின் அருளைப் பெறலாம்.
