கர்நாடக மாநிலம், ஹானூர் வட்டம், மரியமங்கலம் வனப்பகுதிக்குள் மிரண்டு வேட்டையாடச் சென்றதாகக் கூறி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகிய மூன்று அப்பாவித் தமிழர்களை கர்நாடக வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
ஆரம்பத்தில், தங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், தற்காப்புக்காக பதிலடி தாக்குதல் நிகழ்த்தியதாக கர்நாடக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட சதி என்று பல்வேறு தரப்பினரும் கடுமையாகக் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த சூழலில், வனத்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று தமிழர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் நேற்று (ஆகஸ்ட் 24) வெளியிடப்பட்டன. இந்த அறிக்கைகள் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
உயிரிழந்த குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, அவரது தலையில் அணியும் டார்ச் லைட், பீடி துண்டுகள் மற்றும் லைட்டர் ஆகியவை இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மிக அருகிலிருந்தே துப்பாக்கியால் அவர் சுடப்பட்டதாகவும், குறிப்பாக வலது தொடையில் மிக அருகில் சுடப்பட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. குமாரின் இடது மார்பு மற்றும் வலது தொடையில் இருந்து அகற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகள் தற்போது காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அந்தோணி சாமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது மார்பு மற்றும் கழுத்துப் பகுதிகளில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது. மேலும், அவரது உள்ளாடையிலிருந்து ஷாட்கன் வகை துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 9 அலுமினிய பிரைமர் வகை குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய உடலிலிருந்தும் பல துப்பாக்கி குண்டுகள் அகற்றப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பீட்டர் பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படியும், இவரும் மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இவரது மார்பு, கழுத்து மற்றும் தொடை உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த பிரேதப் பரிசோதனைகள் அனைத்தும் மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஹோலேமுரிதட்டி மற்றும் பெட்டேகரரா குட்டா ஆகிய பகுதிகளில் உள்ள வேட்டைத்தடுப்பு முகாம்களைச் சேர்ந்த அதிகாரிகளிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை மொத்தம் 12 வனத்துறை அதிகாரிகளிடம் போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் ஒரே நேரடி சாட்சியான, உயிர் தப்பிய மகிமை தாஸின் வாக்குமூலத்தையும் விசாரணை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் வனத்துறையின் நான்காவது குற்றவாளியாக மகிமை தாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு தற்காப்புக்காக நடத்தப்பட்டதாக வனத்துறை தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வந்த நிலையில், மூவரும் மிக அருகிலிருந்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

