தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே மணக்கரை பகுதியில், ராமாயணத்தில் வரும் வாலிவதத்தை நினைவு கூறும் விதமாக 'கள்ளவாண்டர்' சுவாமி கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழாவில், கொதிக்கும் அரிசிக் கஞ்சியை பக்தர்கள் தங்கள் தலையில் ஊற்றிக்கொள்ளும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. இது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
ராமாயணத்தில், தன் மனைவியை வாலியிடமிருந்து மீட்க நினைத்த சுக்ரீவன், அத்திரி மலையில் இருந்த ராமனிடம் உதவி கோரினார். சுக்ரீவனுக்கு உதவ ராமர் முடிவு செய்தார். ஆனால், வாலியுடன் நேருக்கு நேர் போரிட்டால் தன் வலிமையில் பாதி வாலிக்குச் சென்றுவிடும் என்பதால், ராமர் வாலியை மறைந்திருந்து வதம் செய்தார். கீழே விழுந்த வாலி, 'மறைந்திருந்து என்னை வீழ்த்தி விட்டாயே ராமா..! கள்ள ஆண்டவனே!' என்று கதறியபடியே உயிர்நீத்தார்.
ராமாயணத்தின் 'கிஷ்கிந்தை' காண்டத்தில் வரும் இந்த வாலிவதம், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள மணக்கரை பகுதியில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதையொட்டி, மணக்கரை கிராமத்தில் ராமரின் நினைவாக 'கள்ளவாண்டர்' சுவாமி கோயில் எழுப்பப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது. 'கள்ள ஆண்டவர்' என்ற பெயரே மருவி 'கள்ளவாண்டர்' என ஆனதாகக் கூறப்படுகிறது.
மணக்கரை பகுதியிலிருந்து 'பிடிமண்' எடுத்துச் சென்று, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் கள்ளவாண்டர் சுவாமி கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் மட்டுமே கள்ளவாண்டர் சுவாமி கோயில்களைக் காண முடியும். வாலிவதம் திறந்தவெளியில் நடைபெற்றதாகக் கருதப்படுவதால், இக்கோயில்களும் திறந்தவெளியிலேயே அமைந்துள்ளன.
இந்நிலையில், தீராத்திகுளம் கிராமத்தில் உள்ள கள்ளவாண்டர் சுவாமி கோயிலில் திருவிழா நடைபெற்றது. வேட்டைப்பானை நிகழ்ச்சியைக் காண சுற்றுவட்டார கிராம மக்கள் தீராத்திகுளத்தில் திரளாகக் குவிந்திருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில், கோயிலின் முன்பு வரிசையாக 11 அடுப்புகள் தயார் செய்யப்பட்டு, அதன் மேல் 11 பெரிய மண் பானைகள் வைக்கப்பட்டன.
பனையோலைகளைக் கொண்டு தீ மூட்டி, பச்சரிசிக் கஞ்சி காய்ச்சப்பட்டது. கஞ்சி கொதித்த பிறகு வேட்டைப்பானை பூஜை நடைபெற்றது. அப்போது, நையாண்டி மேளம் மற்றும் உருமி மேளம் இசைக்கப்பட்டன. வில்லிசைப் பாடல்கள் மூலம் கள்ளவாண்டர் சுவாமியின் திருக்கதை தாளத்துடன் எடுத்துரைக்கப்பட்டது. கள்ளவாண்டர் சுவாமிக்கு ஆடும் பக்தர்கள், அந்தக் கதையைக் கேட்டபடியே சுவாமி வந்து ஆடினார்கள்.
அருள் வந்து ஆடிய பக்தர்கள், வேட்டைப்பானைகள் அருகில் சென்று தென்னம்பாளையை எடுத்து, பானைக்குள் முக்கி எடுத்து, கொதிக்கும் அரிசிக் கஞ்சியை தங்கள் தலையில் ஊற்றிக்கொண்டனர். இந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்கச் செய்தது. மேளச் சத்தத்தை விட பெண்களின் குலவைச் சத்தம் விண்ணை முட்டியது.
