வரவேற்கத்தக்க பட்ஜெட் அறிவிப்புகள்: லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்

லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதிய தமிழ்நாடு அரசின் 2026-27 பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கருத்து தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் மக்களுக்கு பிடித்தமான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருப்பது ஆறுதல் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் முதல் AI நகர சாத்தியக்கூறு ஆய்விற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மேலும், மீனவர்களுக்கு பணியில்லாக் காலங்களில் வழங்கப்படும் மீன்பிடி உதவித்தொகை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என குறிப்பிட்டுள்ளார்.

கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், வெற்றி மடிக்கணினித் திட்டத்திற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதியுடன் கூடிய நவீன மிதிவண்டி வழங்க ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வரும் தலைமுறையினர் கல்வியில் மேலும் மேம்படுவார்கள் என நம்பிக்கை பிறக்கிறது.

மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அண்ணனின் சீர் திட்டம் உருவாக்கப்பட்டு, பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்குவதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் பலருக்கும் நன்மைகளைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 20,000 இளைஞர்களுக்கு பணியிடப் பயிற்சி அளிக்கவும், பட்டதாரிகள் மற்றும் தொழிற்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கவும் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைத்து, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை நோக்கமாகக் கொண்டு பயிற்சி வழங்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வரவேற்புக்குரிய திட்டங்கள் ஆகும்.

கடலோரப் பகுதிகளைப் பாதுகாத்து, பருவநிலை மாற்ற பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 2,500 ஹெக்டேரில் புதிய அலையாத்தி காடுகள் உருவாக்க ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒகேனக்கல் – திருவரங்கம், மதுரை & பாபநாசம் – திருநெல்வேலியில் நதிச் சுற்றுலா வழித்தடங்களை உருவாக்க ரூ.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.

அதேநேரம், தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 இலவச LPG சிலிண்டர்கள், அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம், 20 லட்சம் வரை பிணையில்லாக் கல்விக்கடன் போன்ற முக்கிய வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறாதது சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது. இருப்பினும், புதிய அரசாக இருந்து, பொதுமக்களுக்குப் பிடித்தமான பல அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. இதை லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் நான் வரவேற்கிறேன் என ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version