செப்டம்பர் 22 அன்று டோக்கியோவில் இந்திய மற்றும் ஜப்பான் கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷியைக் கண்டு தங்களுக்கு எந்த அச்சமும் இல்லை என்று ஜப்பான் கேப்டன் கெண்டல் கடோவாகி-ஃபிளெமிங் சவால் விடுத்துள்ளார்.
இதுவரை ஜப்பான் அணியுடன் இந்திய ஆண்கள் அணி எந்தவொரு இருதரப்பு கிரிக்கெட் தொடரிலும் விளையாடியதில்லை. 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த சர்வதேச போட்டி நடத்தப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே கிரிக்கெட்டில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
ஜப்பான் அணி அனுபவம் குறைந்த அணியாக இருந்தாலும், இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை சமாளிக்கும் அளவுக்குத் தங்களுக்குத் திறமை இருப்பதாக ஜப்பான் அணியின் கேப்டன் கெண்டல் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். விஸ்டன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இது குறித்துப் பேசினார்.
"இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி குறித்து எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அவரை வீழ்த்துவதற்கான வியூகம் எங்களிடம் தயாராக உள்ளது. எங்கள் அணியில் 17 வயதான இடதுகை சுழற்பந்து வீச்சாளர் சார்லி ஹாரா-ஹின்ஸ் இருக்கிறார். அவர் ஏற்கனவே வைபவை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். எனவே அவரை நாங்கள் எளிதாகச் சமாளிப்போம்" என்று ஜப்பான் கேப்டன் கெண்டல் கூறினார்.
கடந்த 2024-ம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பைப் போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி 19 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த போது, சார்லி ஹாரா-ஹின்ஸின் சுழற்பந்து வீச்சில் சிக்கி ஆட்டமிழந்தார். அந்தப் பழைய சம்பவத்தைச் சுட்டிக்காட்டியே ஜப்பான் கேப்டன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான போட்டி ஏற்பாடுகள் குறித்துப் பேசிய கேப்டன் கெண்டல், "எங்கள் மைதானத்தில் பொதுவாக 500 பேர் மட்டுமே அமரும் வசதி உள்ளது. ஆனால் இந்திய நட்சத்திர வீரர்களைக் காண டோக்கியோ மற்றும் பிற பகுதிகளில் இருந்து சுமார் 2000 முதல் 3000 ரசிகர்கள் மைதானத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதற்காக மைதானத்தில் கூடுதல் தற்காலிக பார்வையாளர் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.
ஐபிஎல் மற்றும் உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடி சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக, ஜப்பான் கேப்டன் விடுத்துள்ள இந்த சவால், இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
