ஜெயிலர் 2 படப்பிடிப்பு: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி – அதிர்ச்சியில் படக்குழு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் சுமார் ரூ.600 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ‘ஜெயிலர் 2’ திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினி-நெல்சன் கூட்டணி இணைந்திருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்கின்றனர். மேலும், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, மிர்னா மேனன், வசந்த் ரவி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

தற்போது, ‘பேட்ஜ் ஓர்க்’ எனப்படும் விடுபட்ட காட்சிகளை படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் உள்ள ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பின் போது எதிர்பாராத சோகம் நிகழ்ந்துள்ளது.

படத்தின் ஆர்ட் டைரக்‌ஷன் பிரிவில் மின் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்த கார்த்திகேயன் (சேலம் பகுதியைச் சேர்ந்தவர்) என்பவர், பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் ‘ஜெயிலர் 2’ படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து கானத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version