அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக ஈராக் இளைஞர் ஒருவர் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஈரான் முன்னாள் ராணுவ தளபதி சுலைமானி, 2020-ல் ஈராக்கில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சுலைமானியின் நெருங்கிய தொடர்பாளரும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவருமான முகமது பாகெர் சாத் தாவூத் அல்-சாதி, இவான்காவை கொல்ல திட்டமிட்டுள்ளார்.
தாவூத் அல்-சாதி, இவான்காவின் புளோரிடா இல்லம் குறித்த வரைபடத்தையும், அவருக்கும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னருக்கும் சொந்தமான வீடு இருக்கும் பகுதியைக் காட்டும் படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'உங்களது அரண்மனைகளோ அல்லது ரகசியப் பாதுகாப்புப் படையோ உங்களைக் காப்பாற்றாது. பழி வாங்குவது காலத்தின் கட்டாயம்' என அரபு மொழியில் மிரட்டல் விடுத்துள்ளார்.
கடந்த 15-ம் தேதி துருக்கியில் கைது செய்யப்பட்ட தாவூத், அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். ஆம்ஸ்டர்டாமில் உள்ள 'பேங்க் ஆஃப் நியூயார்க் மெலன்' கட்டிடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியது, டொராண்டோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தியது உள்ளிட்ட 18 தாக்குதல்கள் மற்றும் தாக்குதல் முயற்சிகள் தொடர்பாக அவர் மீது அமெரிக்க நீதித் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தற்போது, தாவூத் அல்-சாதி புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

