ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேற யஷஸ்வி ஜெய்ஸ்வால் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், சில காரணங்களால் அவர் 2027 ஐபிஎல் சீசனுக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டார். ஜெய்ஸ்வாலை வேறு அணிக்கு மாற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் நடத்திய வர்த்தக பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக அமையாததால், அவரது வெளியேறும் திட்டம் தோல்வியில் முடிந்தது.
ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வாலுக்கு மனக்கசப்பு ஏற்பட இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வருகையும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த 2026 ஐபிஎல் சீசனில் இடதுகை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வாலை விட, மிக இளம் வயதான வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இது ஜெய்ஸ்வாலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், சஞ்சு சாம்சன் அணியை விட்டு சென்ற பிறகு, தனக்கு கேப்டன் பதவி கிடைக்கும் என ஜெய்ஸ்வால் எதிர்பார்த்தார். ஆனால், அணி நிர்வாகம் ரியான் பராக்கை கேப்டனாக நியமித்தது. இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவிக்கும் ஜெய்ஸ்வால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் ரியான் பராக் மற்றும் வைபவ் சூர்யவன்ஷியால் தனக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக உணர்ந்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவர், தன்னை வேறு அணிக்கு மாற்றுமாறு ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்திடம் வெளிப்படையாக கேட்டுக்கொண்டார்.
ஜெய்ஸ்வாலை விடுவிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் முதலில் விரும்பவில்லை. இருப்பினும், அவரது அதிருப்தியைக் கருத்தில் கொண்டு, லக்னோ மற்றும் டெல்லி அணிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், ஜெய்ஸ்வாலுக்கு ஈடாக ராஜஸ்தான் அணி கேட்ட இரண்டு வீரர்களை கொடுக்க லக்னோ அணி மறுத்துவிட்டது. அதேபோல, டெல்லி அணி கொடுத்த வீரர்கள் பட்டியலில் ராஜஸ்தான் நிர்வாகத்திற்கு உடன்பாடு ஏற்படவில்லை.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளும் ஜெய்ஸ்வாலை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் டிசம்பர் 9 ஆம் தேதி வரை ஏலத்திற்கு முந்தைய வீரர்கள் பரிமாற்றம் செய்ய அவகாசம் இருப்பதால், அடுத்தகட்ட நகர்வுகள் தீவிரமடைந்துள்ளன.
கடந்த 2020 முதல் 7 சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜெய்ஸ்வால், கடந்த 4 சீசன்களில் தொடர்ந்து 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதில் 2 முறை 500 ரன்களையும், ஒரு முறை 600 ரன்களையும் அவர் கடந்துள்ளார். இவ்வளவு திறமையான வீரர் அணியை விட்டு வெளியேற நினைப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

