நாட்டின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, சாதாரண வகுப்பு பயணிகளுக்காக ஒரு புதிய கட்டணத் திட்டத்தை அறிவித்துள்ளது. வழக்கமாக, எகானமி வகுப்பு பயணிகளுக்கு ஏழு கிலோ கைப்பை மற்றும் 15 முதல் 20 கிலோ வரையிலான பெட்டிகளை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. ஆனால், இண்டிகோவின் புதிய 'லைட்' கட்டணத் திட்டத்தின் கீழ், ஏழு கிலோ வரையிலான கைப்பை மட்டும் எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு அடிப்படை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குறைந்த பைகளுடன் பயணித்து, தங்களுக்குத் தேவையான சேவைகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்த விரும்பும் பயணிகளுக்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சந்தை தேவைகளுக்கு ஏற்ப சேவைகளை மாற்றியமைப்பதும், விமானப் பயணத்தை குறைந்த செலவில் வழங்குவதும் இதன் முக்கிய நோக்கமாகும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சலுகை, குறைந்த லக்கேஜுடன் பயணம் செய்ய விரும்புவோருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதன் மூலம், பயணிகள் தங்களுக்குத் தேவையான சேவைகளுக்கு மட்டும் பணம் செலுத்தி, விமானப் பயணத்தை மேலும் சிக்கனமாக்கிக் கொள்ள முடியும்.
ஏற்கனவே, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் இதேபோன்ற சலுகையை அறிவித்து, கைப்பை மட்டும் எடுத்துச் செல்லும் பயணிகளுக்கான கட்டணத்தைக் குறைத்துள்ளது. இண்டிகோவின் இந்த அதிரடி அறிவிப்பு, விமானப் பயணத் துறையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.