மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நடுவானில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று இரவு 10 மணிக்கு கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், வழக்கமாக இரவு 11:30 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தை வந்தடையும். அந்த வகையில், நேற்று இரவு சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் 224 பயணிகள் மற்றும் ஐந்து விமான ஊழியர்கள் என மொத்தம் 229 பேர் பயணித்தனர்.
விமானம் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென அதன் இடது பக்க என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. மேலும், சிறிய அளவில் எண்ணெய் கசிவும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி, விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதை உணர்ந்து, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
விமானியின் தகவலையடுத்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடனடியாக ஓடுபாதைப் பகுதியில் அவசர நிலையை அறிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பு வண்டிகள், மருத்துவக் குழுவினர் மற்றும் பிற பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டன. அதுவரை, அந்த விமானம் தரையிறங்காமல் வானில் தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டிருந்தது.
அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்ட பிறகு, விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, இரவு 11.37 மணிக்கு அந்த விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இதில் பயணித்த 229 பேரும் எந்தவித பாதிப்பும் இன்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
விமானம் தரையிறங்கிய பிறகு, விமானப் பொறியாளர்கள் குழுவினர் உடனடியாக விமானத்திற்குள் சென்று பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும், அந்த விமானம் உடனடியாக மீண்டும் பறப்பதற்கு தகுதியற்றது என தெரியவந்ததால், நள்ளிரவு 12 மணியளவில் அது அதிகாரப்பூர்வமாக இயங்க முடியாத நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், அந்த விமானம் நடைமேடைக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது.
இந்த அசம்பாவிதம் சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தும்படி டெல்லியில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

