திரைத்துறையின் பொருளாதார சவால்கள்: கமல் அழைப்பு!

உலகம் முழுவதும் நிலவும் பொருளாதார நெருக்கடி, குறிப்பாக இந்தியாவில் திரைத்துறையை கடுமையாக பாதிக்கும் என நடிகர் கமல்ஹாசன் எச்சரித்துள்ளார். அதிகரித்து வரும் தயாரிப்பு செலவுகள், நிச்சயமற்ற வருமானம் போன்ற பிரச்சனைகளுக்கு மத்தியில், சர்வதேச போர் சூழல் மேலும் சுமையை அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் பொழுதுபோக்கு செலவுகளை குறைக்கக்கூடும் என்றும், இது ஒட்டுமொத்த திரை உலகையும் பாதிக்கும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படத் துறை தொடர்ந்து வளர வேண்டுமானால், செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் முறைப்படி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வெறும் பிரம்மாண்டமான தோற்றத்திற்காக செலவு செய்வது அர்த்தமற்றது. மோசமான திட்டமிடல், தவிர்க்கக்கூடிய வீணடிப்புகள், ஆரவாரமான ஆடம்பரங்கள், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்கள், தயாரிப்பு தாமதங்கள் மற்றும் செலவுக்கும் அதன் நோக்கத்திற்கும் இடையே அதிகரிக்கும் இடைவெளி போன்றவற்றை சரி செய்ய வேண்டியது அவசியம்.

இந்தியத் திரைப்படத் துறை முழுவதும் உள்ள சிந்தனையாளர்கள் ஒன்றிணைவதற்கான சரியான தருணம் இது என நம்புவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் பொருளாதார சவால்களை கூட்டாக எதிர்கொள்வது குறித்து விவாதிக்க, தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், தொழிற்சங்கங்கள், ஸ்டுடியோக்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஓடிடி தளங்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு அவர் வெளிப்படையான உரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆடம்பரமாகச் செய்யப்படுவதுதான் பிரம்மாண்டம் என தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் நமது சிறந்த திரைப்படங்கள், ஆடம்பரத்தால் ஆனவை அல்ல. மாறாக தெளிவான திட்டமிடல், நேரத்தியான செயலாக்கம் மற்றும் உறுதியான நம்பிக்கையுடனே அவை உருவாக்கப்பட்டன. உலக அளவில் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவும் இக்காலகட்டத்தில், ஒவ்வொரு துறையும் தொலைநோக்குப் பார்வையுடனும் கட்டுப்பாடுடனும் செயல்பட வேண்டும். இந்தியத் திரைப்படத் துறையும் இந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். சினிமாவின் பொருளாதாரத்தை இன்று பாதுகாத்தால், அதன் எதிர்காலத்தை நாளை பாதுகாக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version