இந்திய கிரிக்கெட் அணியில் அடுத்தடுத்து வீரர்கள் காயமடைந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அணியின் மருத்துவக் குழு மற்றும் உடற்பயிற்சியாளர்களின் செயல்பாடுகள் மீது அதிருப்தி எழுந்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் இந்த தொடர் காயங்களால் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்பாக ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் எனப் பல முக்கிய வீரர்கள் காயமடைந்தது அணி நிர்வாகத்திற்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதை அடுத்து இந்திய அணியின் தலைமை உடற்பயிற்சியாளர் கமலேஷ் ஜெயின் மற்றும் மருத்துவர் ரிஸ்வான் கான் ஆகியோரின் செயல்பாடுகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
2022 முதல் இந்திய அணியுடன் பயணிக்கும் கமலேஷ் ஜெயின் மீது புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் இலங்கை டெஸ்ட் தொடருக்குப் பிறகு தங்களது பதவிகளை இழக்க நேரிடலாம் என்று கூறப்படுகிறது. அணியின் முக்கிய வீரர்கள் காயம் காரணமாகத் தொடர்ந்து விலகுவதால், ஒரு நிலையான பிளேயிங் லெவனைத் தேர்வு செய்ய முடியாமல் கௌதம் கம்பீரும், சுப்மன் கில்லும் திணறி வருகின்றனர்.
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் தேசிய அகாடமியின் (சிஓஇ) செயல்பாடுகளும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளன. இந்திய அணிக்கான 15 வீரர்கள் கொண்ட பட்டியல் கூட விருப்பபடி தேர்வு செய்ய முடியாமல் போவது தங்களுக்குப் பெரும் சங்கடத்தை அளிப்பதாக பிசிசிஐ நிர்வாகத்தில் உள்ள சிலர் புலம்பி வருகின்றனர்.
காயம் குணமடைவதற்கு முன்பாகவே வீரர்கள் அவசர அவசரமாக மைதானத்திற்குள் திருப்பி அனுப்பப்படுகிறார்களா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய போது நிதிஷ் குமார் ரெட்டி 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருந்தாரா? ஹர்ஷித் ராணா அவசரமாகக் களமிறக்கப்பட்டாரா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இவர்கள் இருவரும் அதற்கு முன்னர் வரை காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்தனர். உடற்தகுதி பெற்றால் மட்டுமே மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முடியும் என்ற நிலையில், அவர்கள் அவ்வாறு விளையாடிய சில போட்டிகளில் மீண்டும் காயம் அடைந்தனர்.
முன்னாள் உடற்பயிற்சி பயிற்சியாளர் சோஹம் தேசாய்க்குப் பதிலாக அட்ரியன் லீ ரக்ஸ் நியமிக்கப்பட்ட பிறகு, வீரர்களின் உடற்தகுதி குறித்த விவகாரம் சரியாக இல்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள பல மூத்த வீரர்கள், பிசிசிஐ-க்கு வெளியே இருக்கும் மருத்துவ நிபுணர்களிடம் தங்களது காயங்களுக்குத் தனிப்பட்ட முறையில் சிகிச்சை பெறத் தொடங்கியுள்ளனர்.
இலங்கை டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்த விவகாரத்தில் பிசிசிஐ பல அதிரடி முடிவுகளை எடுத்து, வீரர்களின் காயங்களைக் குறைக்கப் புதிய வழிமுறைகளைக் கொண்டு வர உள்ளதாகத் தெரிகிறது.
