இந்தியா – வங்கதேசம் கிரிக்கெட் தொடர் ரத்து? அரசியல் பூகம்பம்!

இந்தியா - வங்கதேச கிரிக்கெட் தொடர் குறித்த அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அணி வங்கதேசம் சென்று கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது தொடர்பாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள், தற்போது முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லியில் இருந்து அளித்த பேட்டியால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் விரிசல் காரணமாக இந்த கிரிக்கெட் தொடர் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த கலவரத்தின் போது உயிர் தப்பி இந்தியாவுக்கு வந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்து வசித்து வருகிறார். வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஷேக் ஹசீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர் இந்தியாவில் தங்கியிருப்பது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5 அன்று புதுடெல்லியில் இருந்து இணையவழி வாயிலாக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். இதற்கு வங்கதேச அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. எங்கள் நாட்டின் ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் கருத்துக்களை ஷேக் ஹசீனா டெல்லியில் இருந்து வெளியிட்டு இருக்கிறார். அதற்கு அனுமதித்துவிட்டு, இந்தியா நட்புறவை எதிர்பார்க்க முடியாது என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் சலாவுதீன் அகமது ஆகஸ்ட் 8 அன்று தெரிவித்தார். இந்த அரசியல் முரண்பாடுகள் காரணமாக, செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த இந்தியா – வங்கதேச கிரிக்கெட் தொடர் கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் வங்கதேசத்தில் நடந்த பொதுத்தேர்தலுக்குப் பிறகு, வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவராக பொறுப்பேற்ற முன்னாள் கேப்டன் தமீம் இக்பால், இந்திய அணியை வரவழைத்து இத்தொடரை நடத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். நிதி ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் இந்திய அணியின் வருகை வங்கதேசத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்பட்டது.

முன்னதாக, 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரிலும் அரசியல் சூழல் காரணமாக வங்கதேசம் இந்தியா வர மறுத்தது. அதன் விளைவாக, உலகக்கோப்பை தொடரில் இருந்தும் வங்கதேசம் நீக்கப்பட்டது. தற்போதைய இந்தியா – வங்கதேச கிரிக்கெட் தொடர் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பிறகு இந்த தொடர் நடப்பது சந்தேகம்தான். வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்தியத் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை' என்று தெரிவித்தார்.

அதிகாரப்பூர்வமாக இந்தத் தொடர் ரத்து செய்யப்படும் வரை வங்கதேச கிரிக்கெட் வாரியம் சிறிய நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பதற்றமான அரசியல் சூழலைப் பார்க்கும்போது, இந்திய கிரிக்கெட் அணி செப்டம்பர் மாதம் வங்கதேசத்திற்குப் பயணம் செய்வது சாத்தியமில்லை என்றே பரவலாகக் கருதப்படுகிறது. இந்த அரசியல் பின்னடைவு, இரு நாட்டு கிரிக்கெட் உறவில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version