இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் சர்வதேச களத்திற்குத் திரும்புவதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இருப்பினும், கேரளாவில் நிலவும் கனமழை காரணமாக இந்த ஆட்டத்திற்கு வானிலை முட்டுக்கட்டை போடுமா என்ற கவலை எழுந்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் போட்டி நடைபெறும் நாளிலும் திருவனந்தபுரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்தப் போட்டியின் போது நாள் முழுவதும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதற்கு முன்பும் பல போட்டிகள் கேரளாவின் திருவனந்தபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளன. எனவே, இந்த போட்டிக்கும் அதே நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வானிலை அறிக்கையின்படி, போட்டி தொடங்கும் பிற்பகல் 2:00 மணி அளவில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 50 சதவீதமாக உள்ளது. மதியம் 1:00 மணி மற்றும் மாலை 4:00 மணியளவில் 45 சதவீதமும், மாலை 6:00 மணியளவில் 35 சதவீதமும் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இரவு 8:00 மணிக்கு மேல் மழைக்கான வாய்ப்பு 25 சதவீதமாகக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மதியம் டாஸ் போடும் நேரத்திலும், ஆட்டத்தின் முதல் பாதியிலும் மழை குறுக்கிட அதிக வாய்ப்புள்ளதால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம். எனினும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை படிப்படியாகக் குறையும் என்பதால், போட்டி முற்றிலும் கைவிடப்பட வாய்ப்பில்லை என நம்பப்படுகிறது.
இந்த போட்டிக்கு மாற்று நாள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டால், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும்.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி களமிறங்கும் இந்த ஆட்டம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் ஜியோஹாட்ஸ்டார் செயலியில் நேரலையாக ஒளிபரப்பாகிறது. ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

