செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு, வாடிக்கையாளர்கள் எந்த வங்கியின் ஏடிஎம்-ஐ பயன்படுத்தினாலும் கட்டணம் வசூலிக்கப்படாது என வங்கிகள் அறிவித்துள்ளன. இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பர் ஆஃபராக அமைந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது வாடிக்கையாளர்களுக்காக இந்த சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில், நாட்டில் உள்ள எந்த வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்தினாலும் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும், PNB-ன் ஏடிஎம் மற்றும் சிஆர்எம் இயந்திரங்கள் முழுமையாகச் செயல்படும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.
இதேபோன்ற அறிவிப்பை பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வங்கியும் வெளியிட்டுள்ளது. அந்நிறுவன வாடிக்கையாளர்களும் செப்டம்பர் 28 முதல் 30 வரை மற்ற வங்கிகளின் ஏடிஎம்-களைப் பயன்படுத்தும்போது எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. பாங்க் ஆஃப் பரோடாவின் ஏடிஎம் மற்றும் பணம் செலுத்தும்/எடுக்கும் சிஆர்எம் இயந்திரங்களும் முழுமையாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனரா வங்கியும் (Canara Bank) தனது வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாட்களுக்கு ஏடிஎம் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்துள்ளது. கனரா வங்கி வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளின் ஏடிஎம்-களில் பணம் எடுத்தாலும் கட்டணம் கிடையாது. மேலும், மற்ற வங்கிகளின் பணம் டெபாசிட் செய்யும் பிஎன்ஏ (BNA) இயந்திரங்களைப் பயன்படுத்தினாலும் கட்டணம் இல்லை என்று கனரா வங்கி அறிவித்துள்ளது.
வேலைநிறுத்தம் நடைபெற்றாலும், யுபிஐ (UPI), ஐஎம்ப்எஸ் (IMPS), ஆர்டிஜிஎஸ் (RTGS) மற்றும் என்இஎஃப்டி (NEFT) போன்ற சேவைகள் 24 மணி நேரமும் தடையில்லாமல் கிடைக்கும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி உறுதி அளித்துள்ளது. வாடிக்கையாளர்கள் மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் வாட்ஸ்அப் பேங்கிங் உள்ளிட்ட டிஜிட்டல் வங்கிச் சேவைகளையும் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தத்தின் போது வங்கி கிளைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டாலும், ஏடிஎம் மற்றும் பிற டிஜிட்டல் வங்கிச் சேவைகள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான முக்கிய பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

