நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூரியவன்சியின் அதிரடியான ஆட்டத்தை முன்னாள் வீரர் இர்பான் பதான் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் 3ஆவது போட்டியில், வெறும் 15 வயதான சூரியவன்சி 19 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் குவித்து அசத்தினார்.
இரண்டாவது போட்டியில் 3ஆம் வரிசையில் களமிறங்கி 8 பந்துகளில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்த அவர், இப்போட்டியில் தனது வழக்கமான தொடக்க ஆட்டக்காரர் இடத்தில் களமிறங்கி மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சூரியவன்சியின் பேட்டை வைத்து அடிக்கும் விதம் சக்தி வாய்ந்ததாக உள்ளது என்று பதான் குறிப்பிட்டுள்ளார்.
தனது யூடியூப் வீடியோவில் பேசிய இர்பான் பதான், 'வைபவ் பேட்டை அடிக்கும் விதத்தை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. 30 வயது உடைய வீரரால் கூட உருவாக்க முடியாத அளவுக்கு அவர் பேட்டில் இருந்து பவரை உருவாக்குகிறார். அவரது இடுப்பு மற்றும் தோள்பட்டை அசைவுகள் அதிகமாக இருந்தாலும், அவரது தலை அசையாமல் நிலையாக இருக்கிறது' என்று கூறினார்.
முதல் பந்திலிருந்தே அதிரடியைத் தொடங்கிய சூரியவன்சி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைத் தொடக்கத்திலேயே நிலைகுலையச் செய்தார் என்று குறிப்பிட்ட பதான், 'முதல் பந்திலேயே பெரிய ஷாட் அடித்து, எனக்கு 15 வயதுதான் இருக்கலாம், ஆனால் என்னைச் சிறுவனாக எண்ணிவிடாதீர்கள். நான் அதிரடி காட்டுவேன்' என்று நியூசிலாந்துக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். முதல் ஓவரிலேயே 20-க்கும் மேற்பட்ட ரன்களை எடுக்கும்போது, அது எதிரணியை அழுத்தத்தில் தள்ளிவிடும். எனவே வைபவ் கொடுத்த அந்த முதல் அடி மிக முக்கியமானது என்றார்.
'எனது பிறந்தநாளில் வைபவ் சூரியவன்சியின் ஆட்டத்தைப் பார்த்தது கேக்கை விட இனிமையாக இருந்தது. இடது கை மற்றும் வலது கை வீரர்கள் தொடக்க ஜோடியாகக் களமிறங்குவதையே நான் விரும்புவேன். அதனால் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராகவும் வைபவ் 3ஆம் இடத்திலும் ஆட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு இளம் வீரருக்கு 3ஆம் இடத்தில் ஜோலிப்பது என்பது எளிதல்ல' என்றும் அவர் தெரிவித்தார்.
இஷான் கிஷன் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியதால், சூரியவன்சி அடுத்த இரு போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்பட்டார். முதல் போட்டியில் விளையாடாத அவர், தமக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
வைபவ் சூரியவன்சி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது. இவர்கள் இருவரும் இணைந்து 43 பந்துகளில் 133 ரன்கள் குவித்து வலுவான தொடக்கத்தை அமைத்தனர். இதன் மூலம் பவர் பிளேவில் 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 118 ரன்கள் எடுத்து, சர்வதேச டி20 போட்டிகளில் பவர் பிளேவில் அதிக ரன்கள் குவித்த புதிய சாதனையை இந்தியா படைத்தது.
சூரியவன்சி அரைசதத்தை தவறவிட்ட போதிலும், அபிஷேக் சர்மா 35 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அவர் 38 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார்.

