1978-ஆம் ஆண்டு வெளியான 'அச்சாணி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்' என்ற பாடல், பாடகி எஸ்.ஜானகியையே கண்ணீரில் கரைய வைத்த ஒரு உணர்ச்சிப்பூர்வமான காவியமாக உருவானது. இன்றைய டிஜிட்டல் இசை உலகில், அர்ப்பணிப்பு மற்றும் திறமையால் மட்டுமே கட்டமைக்கப்பட்ட 70 மற்றும் 80-களின் இசை உலகிற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இப்பாடல் உருவான பின்னணியில் உள்ள நெகிழ்ச்சியான தகவல்கள் தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இப்படத்திற்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவின் சம்பளம் வெறும் 8,000 ரூபாய் மட்டுமே. 'அச்சாணி' திரைப்படத்தின் பாடல்களை ஸ்டீரியோ ரெக்கார்டிங் முறையில் பதிவு செய்ய முதலில் அருணாச்சலா ஸ்டூடியோ ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அங்கு ஸ்டீரியோ முறையில் பதிவு செய்ய இயலவில்லை.
மாற்று ஏற்பாடாக, பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவுக்கு ஒரே ஒரு மணிநேரம் மட்டுமே அவகாசம் கிடைத்தது. இந்தச் சூழலில், மிகக் குறுகிய நேரத்தில் இரண்டு பாடல்களைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இளையராஜா தள்ளப்பட்டார். திட்டமிட்டபடி, 'தாலாட்டு பிள்ளையுண்டு தாலாட்டு' என்ற முதல் பாடலை எஸ்பி பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா குரல்களில் இளையராஜா வேகமாகப் பதிவு செய்து முடித்தார்.
அடுத்ததாக, எஸ். ஜானகியின் குரலில் 'மாதா உன் கோவிலில்' பாடலைப் பதிவு செய்யத் தொடங்கினர். நேரம் குறைவாக இருந்ததாலும், அடுத்தடுத்து ஏற்பட்ட சில இடையூறுகளாலும் இளையராஜா இசைக்குழுவினர் மீது கோபமடைந்தார். அப்போது, பாடகி எஸ். ஜானகி மைக் முன்னால் நின்று அழுது கொண்டிருப்பதை இசைக்குழுவினர் இளையராஜாவிடம் தெரிவித்தனர்.
பதறிப்போன இளையராஜா, எஸ். ஜானகியிடம் சென்று விவரம் கேட்டார். பாடலின் வரிகளும் மெட்டும் தந்த உணர்ச்சிப் பெருக்கால், பாடும்போதே தனக்கு அழுகை வந்துவிட்டதாகவும், அதை அடக்க முடியாமல் தவிப்பதாகவும் ஜானகி கூறினார். இதனால், அவர் சிறிது அவகாசம் கேட்டுள்ளார்.
பாடகி எஸ். ஜானகியையே நிலைகுலையச் செய்த அந்தப் பாடலின் ஜீவனைப் புரிந்துகொண்ட இளையராஜா, அவரை ஆசுவாசப்படுத்தி மீண்டும் பாட வைத்தார். அப்படி அந்த ஒற்றை மணிநேர நெருக்கடிக்குள், உருகி உருகிப் பாடிப் பதிவு செய்யப்பட்ட பாடல் தான் இன்று வரை கேட்போரின் மனங்களைக் கலங்க வைக்கும் 'மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்' என்ற திருப்பாடல்.
இந்தப் பாடல் வெளியாகிப் பல தசாப்தங்கள் கடந்துவிட்டாலும், இன்றும் இது பற்றி நாம் பேசுகிறோம் என்றால், அதற்கு அன்றைய திரைக்கலைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கையும், தொழிலின் மீது அவர்கள் கொண்டிருந்த அற்பணிப்புமே முக்கியக் காரணம். இந்த அர்ப்பணிப்புதான் காலத்தை வென்ற காவியங்களை உருவாக்கியுள்ளது.
