குளிர்காலம் நெருங்கும்போது, மனிதர்கள் கதகதப்பைத் தேடுவது போல, எலிகளும் குளிரில் இருந்து தப்பிக்க பாதுகாப்பான இடங்களைத் தேடுகின்றன. இதனால், உறைபனி மற்றும் அதிக குளிர் நிலவும் காலங்களில் எலிகள் வீடுகளுக்குள் நுழைவது பல மடங்கு அதிகரிக்கிறது. பூச்சிக்கட்டுப்பாட்டு நிபுணர் கிரெக் பாமன் கூறுகையில், 'எலிகள் மிகவும் தகவமைப்புத் திறன் கொண்டவை. அவற்றால் நீந்தவும், மறையவும், பிளாஸ்டிக் வாளிகள் மற்றும் குப்பை பைகளைக் கடித்து துளையிடவும் முடியும்' என்றார்.
குளிர்காலத்தில் எலிகள் பொதுவாக சுவர்களில் உள்ள இடைவெளிகள், இன்சுலேஷன் பகுதிகள், மாடி அறைகள், நிலத்தடி சந்து பகுதிகள், அடித்தளங்கள், கேரேஜ்கள், வீட்டின் பின்புறக் கொட்டகைகள், வுட்போர்டு அடியில் உள்ள பகுதிகள், அரிதாகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள், விறகு குவியல்கள் மற்றும் மட்கிய உர குவியல்கள் போன்ற இடங்களில் தஞ்சம் புகுகின்றன.
பலரும் நினைப்பது போல் எலிகள் குளிர்காலத்தில் 'ஹைபர்னேஷன்' எனப்படும் குளிர்கால உறக்க நிலைக்கு செல்வதில்லை. அவை ஆண்டு முழுவதும் சுறுசுறுப்பாகவே இருக்கும். குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்திருக்க அதிக ஆற்றல் தேவைப்படுவதால், அவை சாதாரண நாட்களை விட அதிகமாக உண்ணும். வீட்டிற்குள் கதகதப்பும் உணவும் கிடைக்கும் வரை எலிகள் குளிர்காலத்திலும் தொடர்ந்து இனப்பெருக்கம் செய்யும். ஒரு முறைக்கு சராசரியாக 8 குட்டிகள் வரை போடும் எலிகள், 2 முதல் 3 மாதங்களிலேயே அடுத்த தலைமுறையை உருவாக்கும் திறன் கொண்டவை.
வசந்த காலத்தின் தொடக்கத்தில், அதாவது மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில், வெளியே மிதமான வானிலை திரும்பும்போது எலிகளின் நடமாட்டம் வெளியில் அதிகரிக்கும். இருப்பினும், நிபுணர் முகமது பார்செகர் கூறுகையில், வீட்டிற்குள் பாதுகாப்புடனும், போதுமான உணவுடனும் குடியேறிவிட்ட எலிகள், குளிர்காலம் முடிந்த பின்னரும் தானாக வெளியேறாது என்கிறார்.
எலிகள் இன்சுலேஷன்களை நாசம் செய்வதோடு, உணவை நச்சுப் பொருளாக்கி நோய்களைப் பரப்பக்கூடியவை. எனவே, குளிர் தொடங்கும் முன்பே பின்வரும் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.
வீட்டின் அடித்தளம், மாடி அறை மற்றும் சுற்றிலும் எலி பொந்துகள் உள்ளனவா என்று மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் உள்ள குப்பைத் தொட்டிகளை எப்போதும் இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். செல்லப்பிராணிகளின் உணவு மற்றும் தானியங்களை நெகிழிப் பைகளில் வைக்காமல், உலோகப் பாத்திரங்களில் அடைத்து வைக்க வேண்டும்.
கதவுகளின் அடியில் உள்ள நெகிழ்வான கதவு இடுக்கு பட்டைகளை எலிகள் கடிக்க முடியாதவாறு மாற்றி அமைக்க வேண்டும். சிங்க் அடியில் உள்ள குழாய் இடைவெளிகளை 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உல்' கொண்டு அடைக்க வேண்டும். பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களில் உணவுப் பொட்டலங்களை வைக்கக் கூடாது.
ஒரு நாணயத்தின் அளவுக்கு சிறிய துளை இருந்தால் கூட எலிகளால் உள்ளே நுழைய முடியும். எனவே, வெளிப்புறச் சுவர்களில் உள்ள துளைகளை 'பிரீத்தபிள் மெஷ்' கொண்டு அடைக்க வேண்டும். இந்த எளிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், குளிர்காலத்தில் எலிகள் உங்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கலாம்.

