தமிழ்நாட்டில் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள எழுத்தாளர் ஜெயமோகன், வாசிப்பு என்பது வெறும் மொழி அறிவை மட்டும் சார்ந்தது அல்ல என்றும், அது சைக்கிள் ஓட்டுவது மற்றும் நீச்சல் அடிப்பது போன்ற தொடர்ச்சியான பயிற்சி தேவைப்படும் செயல்பாடு என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகளின் வாசிப்புத் திறன் தினசரி குறைந்து வருவதாகவும், பள்ளிக் கல்வி முறையும் மனப்பாடத்தை மையமாகக் கொண்டிருப்பதால், குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பது பெற்றோர்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
'முழுமை அறிவு' என்ற முகநூல் பக்கத்தில் வெளியான வீடியோவில், இளைய தலைமுறையினரை எப்படிப் படிக்க வைப்பது என்பது குறித்து தனது கருத்துக்களை ஜெயமோகன் பகிர்ந்து கொண்டார். வாசிப்பு என்பது ஒரு தனிப் பயிற்சி தேவைப்படும் ஒன்று என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
தமிழகத்தில் உள்ள 10 கோடி மக்களில் அதிகபட்சம் ஒரு லட்சம் பேர் மட்டுமே எதையாவது வாசிக்க முடியும் என்றும், மொழி தெரிந்தால் மட்டும் படித்துவிட முடியாது என்றும் அவர் விளக்கினார். கண்கள் இருந்தாலே பார்த்துவிட முடியாது என்றும், மூளைக்கும் கண்களுக்கும் இடையே ஒரு ஒத்திசைவு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாசிப்பு என்பது மூன்று படிநிலைகளைக் கொண்டது என்றும் ஜெயமோகன் விளக்கினார். முதலாவது, எழுத்து வடிவமாக உள்ள அடையாளங்களை கண்ணால் பார்த்து அதை மொழியாக மாற்றும் செயல்பாடு. இரண்டாவது, அந்த மொழியிலிருந்து அர்த்தங்களை உருவாக்கும் செயல்பாடு. மூன்றாவது, அந்த அர்த்தங்களை வாழ்க்கையாக, காட்சிகளாக, உணர்வுகளாக மாற்றும் செயல்பாடு. இந்த மூன்று செயல்பாடுகளும் ஒரே சமயத்தில் நிகழ வேண்டும்.
ஒருவர் எழுத்தைப் பார்க்கும்போது அது மொழியாக மாறுவது அவருக்குத் தெரியக்கூடாது, மொழி அர்த்தங்களாக மாறுவது அவருக்குத் தெரியக்கூடாது. மாறாக, மூன்றாவது செயல்பாடான உணர்வுகளாகவும் காட்சிகளாகவும் சிந்தனைகளாகவும் மாறுவது மட்டுமே நிகழ வேண்டும். வாசிப்பில் தேர்ந்த பயிற்சி இல்லாத ஒருவரால் இவ்வாறு செய்ய முடியாது.
தனித்தனியாக நிகழும் போது மூளை சோர்வடைகிறது. இதனால்தான், பெரும்பாலான தமிழர்களால் 200 அல்லது 300 வார்த்தைகளுக்கு மேல் படிக்க முடியவில்லை. நாளிதழ் கட்டுரைகள் 500 வார்த்தைகளிலிருந்து 300 வார்த்தைகளுக்குச் சுருங்கி இருப்பதற்கும் இதுவே காரணம். பெரும்பாலானவர்கள் அந்தக் கட்டுரைகளின் கமெண்ட் பகுதியில் ஓரிரு வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு எதிர்வினையாற்றுகிறார்கள், கட்டுரையின் ஒட்டுமொத்த கருத்தையோ தர்க்கத்தையோ புரிந்து கொள்வதில்லை.
நமது கல்வி முறை வாசிப்பைச் சார்ந்தது அல்ல, மனப்பாடத்தைச் சார்ந்தது. புரிந்து கொள்வதை சார்ந்தது அல்ல, அப்படியே திருப்பிச் சொல்வதைச் சார்ந்தது. ஆகவே, நமது கல்விமுறை குழந்தைகளுக்கு வாசிப்பைக் கற்றுக் கொடுப்பதில்லை. மாறாக, வாசிக்கக் கூடாது, வாசிப்புப் பழக்கம் தேவையற்றது, வாசிப்புப் பழக்கம் இருந்தால் மதிப்பெண் குறைந்துவிடும் என்ற மனநிலை கல்வி நிலையங்களிலும் பெற்றோர்களிடமும் உள்ளது. எனவே, குழந்தைகளுக்குப் படிப்பதற்கான பயிற்சி அளிக்கப்படவே இல்லை.
இது சைக்கிள் ஓட்டுவது போல, தட்டச்சு செய்வது போல, கார் ஓட்டுவது போல ஒரு பயிற்சி. மூளைக்கும் கண்களுக்கும் ஒரு ஒத்திசைவை உருவாக்க வேண்டும். அந்த ஒத்திசைவு செயல்பாடு தொடர் பயிற்சிகளாக இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு மிக இளவயதிலேயே நீச்சல் பயிற்சி அளிப்பது போல, படிப்பதற்கான பயிற்சியையும் அளித்துவிட முடியும். அந்தப் பயிற்சி இல்லையென்றால் குழந்தைகள் மூழ்கிப் போகும். அதுபோலத்தான் அந்தப் பயிற்சி இல்லாதவர்களால் படிக்க முடியாது.
மேற்கத்திய நாடுகளில் இந்தப் பயிற்சியை ஐந்து வயது ஆறு வயதுக்குள் குழந்தைகளுக்கு அளித்துவிடுகிறார்கள். ஆகவே அவர்கள் இயல்பாகவே படிக்கும் திறன் கொண்டிருக்கிறார்கள். இங்கு அந்தப் பயிற்சி எந்த நிலையிலும் அளிக்கப்படுவதில்லை. தற்செயலாக ஒருவர் அதற்குள் நுழைந்து தானாகவே அடைந்த பயிற்சியைத்தான் வாசிப்பாகக் கொண்டுள்ளனர். ஆகவேதான், 10 கோடி பேரில் ஒரு லட்சம் பேர் மட்டுமே படிக்கிறார்கள் என்பது எவ்வளவு சிறிய சதவீதம் என்பதை யோசித்துப் பாருங்கள். அவர்கள்தான் தமிழில் ஏதேனும் படிக்கிறார்கள். இலக்கியத்தில் அல்ல, எதையாவது ஒரு புத்தகத்தைப் படிக்க தமிழகத்தில் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள். அது மிக அபூர்வமான தனித்திறமை.
