இந்திய உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் இனி சேவை கட்டணம் வசூலிக்க முடியாது என்ற செய்தி நுகர்வோருக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது. உணவு கட்டணத்துடன் சேவை கட்டணம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் தொகை வசூலிக்கப்படுவது தொடர்பாக பல புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து, கடந்த 2022 ஜூலையில், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் தானாகவோ அல்லது கட்டாயமாகவோ சேவை கட்டணத்தை உணவு ரசீதில் சேர்க்கக் கூடாது என முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல்களை எதிர்த்து, தேசிய உணவக சங்கம் மற்றும் இந்திய ஹோட்டல், உணவக சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
'சேவை கட்டணம் என்பது 80 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு தொழில்துறை வழக்கம். இது ஊழியர்களுடனான ஊதிய ஒப்பந்தங்களுடன் தொடர்புடையது' என அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த மார்ச் 28 அன்று பிறப்பித்த உத்தரவில், 'சேவை கட்டணம் கட்டாயமின்றி, விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்களை கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்துவது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019ன் படி நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், 'சேவை கட்டணம் என்பது அரசு வரி என வாடிக்கையாளர்கள் தவறாக கருத வாய்ப்புள்ளதால், அந்த பெயரை பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக, 'விருப்ப நன்கொடை' அல்லது 'ஊழியர் நல நிதி' போன்ற தெளிவான பெயர்களைப் பயன்படுத்த வேண்டும்' என்றும் நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து உணவக சங்கங்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள், டெல்லி உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் சாம்ப்ரே மற்றும் நீதிபதி சஞ்சய் சர்மா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, கட்டாய சேவை கட்டணத்திற்கு தனி நீதிபதி விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு, நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இனி ஹோட்டல்களுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் சேவை கட்டணம் செலுத்தும் கட்டாயத்தில் இருந்து விடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நுகர்வோர் உரிமைகளுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
