சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.480 குறைந்து, ரூ.1,13,040-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல்கள், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடுகள், உலக பங்குச் சந்தைகளின் செயல்பாடு போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது. இந்த காரணிகளின் மாற்றங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன.
இந்தியா உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலின் தாக்கம் உலகப் பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. இது சர்வதேச தங்க சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, விற்பனையில் மாற்றங்களை உண்டாக்கியுள்ளது.
கடந்த மே மாதம், மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. மேலும், கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, தேவையில்லாமல் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார். இந்த அறிவிப்புகளுக்குப் பிறகு, தங்கத்தின் விலை சந்தையில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது.
குறிப்பாக, கடந்த சனிக்கிழமை அன்று மட்டும் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.1,360 குறைந்தது. இந்தத் தொடர்ச்சியான சரிவுகள் நுகர்வோர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளன.
இன்றைய விலை நிலவரப்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.60 குறைந்து, ரூ.14,130-க்கு விற்பனையாகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ.480 சரிந்து ரூ.1,13,040 ஆக உள்ளது.
மேலும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,415-க்கு விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,900-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

