வாக்காளர் பட்டியல் குளறுபடி: ஞானேஷ் குமார் பதவி விலக ஸ்டாலின் வலியுறுத்தல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், அவரது நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்த கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், "SIR என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்களை நீக்கும் முடிவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு அவசர கதியில் நடத்தப்பட்ட இந்தப் பணியில் பல குளறுபடிகள் நடந்தன. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் போர்க்களம் ஆயின" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள செய்தி, SIR-க்குப் பின்பு நடந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் அவர்கள் மற்ற தேர்தல் ஆணையர்கள் இருவரின் ஒப்புதல் இல்லாமல் தன்னந்தனியாக, இரகசியமாகச் செயல்பட்டு வந்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று தேர்தல் ஆணையர்களில் திரு. சுக்பிர் சிங் சந்து மற்றும் திரு. விவேக் ஜோஷி ஆகிய இருவருக்கும், தேர்தல் கமிஷனில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மறைத்து வைக்கப்பட்ட செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவது குறித்து, 10 மாதங்களில் 14 முறை அவர்கள் ஆட்சேபணை தெரிவித்தும் அவை புறக்கணிக்கப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மையையே முற்றிலுமாகச் சீர்குலைத்துள்ளது.

தேர்தல் ஆணையர்கள் மூவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அது சாத்தியமாகாத நிலையில், பெரும்பான்மையின் அடிப்படையில் முடிவுகள் அமைய வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணைய விதி. ஆனால், மூவரில் இருவருக்குத் தாங்கள் பொறுப்பு வகிக்கும் அமைப்பில் என்ன நடக்கிறதென்பதே தெரியாமல் இருந்திருக்கிறது என்றால், இதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

"இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது. சுதந்திரமாகவும், வெளிப்படைத்தன்மையோடும், அரசியல் குறுக்கீடுகள் இல்லாமலும் செயல்பட வேண்டிய உச்ச அமைப்பின் மீது மிகப் பெரும் களங்கம் படிந்துள்ளது" என ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

"நீதிமன்றமே தலையிட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கச் சொன்ன பிறகும், அவர்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு எதிராக மேல்முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன. யார் இதனைச் செய்தது? அதுகுறித்து கூட எங்களுக்குத் தெரியவில்லை. சட்டப்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்களைச் சரிபார்த்து மேற்கொள்ள ERO எனப்படும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், தகுதியுள்ள வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் அவர்களால் சேர்க்க முடியவில்லை. அதைச் செய்வதற்கான ERONet வலைத்தளம் முற்றிலுமாக ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது" என இரண்டு தேர்தல் ஆணையர்களும் தெரிவித்துள்ளார்கள் என்றால், தேர்தல் ஆணையத்தில் எந்த அளவுக்கு அரசியல் குறுக்கீடுகள் இருந்திருக்கும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

"ஏற்கெனவே, கடந்த மார்ச் மாதத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தோம். இனியும் அவர் அந்தப் பதவியில் நீடிக்க கூடாது. ஞானேஷ் குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். SIR நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதுவரை தேர்தல் ஆணையத்தில் நடந்த அனைத்தும் நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டு இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனத் திமுக சார்பில் வலியுறுத்துகிறோம்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version