பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் ஹரிஹரன், ஜெம் வீரமணி தொடர்பான வழக்கில் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் பென்டிரைவ் முதலில் தனது நிறுவனத்திற்கே கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் தேதி, தங்கள் நிறுவனத்திற்கு ஒரு பென்டிரைவ் கிடைத்ததாகவும், அதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வீரமணியின் சுமார் 20 நிமிட வீடியோ பதிவாகி இருந்ததாகவும் ஹரிஹரன் கூறினார். மேலும், 'குற்றவாளி சாந்தி, வீரமணி' என்ற குறிப்பும் அதில் இருந்ததாக அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில், 12 வயது சிறுமியை வீரமணி வன்கொடுமை செய்தது தெரியவந்ததாக ஹரிஹரன் குறிப்பிட்டார்.
இந்த பென்டிரைவை காவல் உதவி ஆணையரிடம் ஒப்படைத்ததாகவும், அவரது அறிவுறுத்தலின் பேரிலேயே காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இதுபோன்ற வழக்குகளில் காவல் துறையினர் ஒரு சதவீதம் மட்டுமே உதவுவதாகவும், முந்தைய ஆட்சியில் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
வீரமணிக்கு எதிராக நிறைய வீடியோக்கள் இருப்பதாக கூறப்படுவது வெறும் கற்பனை என்றும், புகார் அளித்த மறுநாளே முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்ட போதிலும், வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் தற்போதுதான் தெரியவந்துள்ளதாகவும் ஹரிஹரன் தெரிவித்தார். கோடிக்கணக்கில் பணம் கைமாறி, இந்த வழக்கை மூடி மறைக்க முயற்சித்ததாலேயே விசாரணை தாமதமானதாக அவர் குற்றம் சாட்டினார்.
வீரமணியின் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என ஹரிஹரன் வலியுறுத்தினார். குழந்தைகள் நலனுக்காக பின்தங்கிய மாநிலங்கள் கூட பணம் செலவழிக்கும் நிலையில், தமிழ்நாட்டில் குழந்தைகள் நல அமைப்புகள் பெயரளவுக்கு மட்டுமே செயல்படுவதாக அவர் விமர்சித்தார்.
ஜெம் வீரமணி தொடர்பான வழக்கை மேலும் விசாரிக்க விசாரிக்க பல உண்மைகள் வெளிவரும் என்றும், பணத் திமிரில் வீரமணி போன்று செயல்படும் பலரை தடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பணத்தால் எதையும் சாதிக்கலாம் என நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சக்தி வாய்ந்த காவல்துறை நினைத்திருந்தால், ஒரே வாரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்திருக்க முடியும் என்றும், ஆனால் ஒரு வருடத்திற்குப் பிறகுதான் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஹரிஹரன் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணையில் வெளிவரும் மேலும் பல தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
