கம்பீர்-அகர்கர் மோதல்: இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவுவதாக முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்த மோதல் போக்கு அணியின் சூழலையும், வீரர்களின் தன்னம்பிக்கையையும் கடுமையாக பாதிப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

இது இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இது குறித்து தினேஷ் கார்த்திக் மிக வெளிப்படையாகப் பேசியுள்ளார். இதே போன்ற தகவலை சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முன்னாள் வீரர் முகமது கைஃப் ஆகியோரும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அகர்கர் மற்றும் கம்பீர் இடையே இருக்கும் இந்த மோதலுக்கு அவர்களின் வெவ்வேறான அணுகுமுறைகளே முக்கியக் காரணம் என்று தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டார். தேர்வுக் குழுத் தலைவர் அகர்கர், இந்திய அணியின் எதிர்காலத்திற்கான நீண்ட கால திட்டங்களை வகுப்பதில் கவனம் செலுத்துகிறார். ஆனால், தலைமைப் பயிற்சியாளர் கம்பீரோ, தான் பொறுப்பேற்றிருக்கும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்படுகிறார்.

இந்த இருவேறுபட்ட சிந்தனைகளால் அணியைத் தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் நிலவுவதாகத் தெரிகிறது. இது சமீபத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் இந்திய அணி சந்தித்த தொடர் தோல்விகள் மூலம் வெளிப்படையாகத் தெரிந்தது. குறிப்பாக, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்காக அனுபவ வீரர் சஞ்சு சாம்சனை நீக்கியது, பின்னர் வைபவ்வுக்கும் சரியான வாய்ப்புகள் வழங்காமல் மூன்று போட்டிகளில் விளையாட வைத்து, ஐந்தாவது போட்டியில் அவரை அணியிலிருந்து நீக்கியது போன்ற குழப்பமான முடிவுகள் அரங்கேறின.

இத்தகைய குழப்பங்களால் வீரர்களிடையே தங்களது இடம் குறித்த பாதுகாப்பற்ற உணர்வு அதிகரித்துள்ளதாக தினேஷ் கார்த்திக் கவலை தெரிவித்துள்ளார். இந்திய அணியில் திறமையான வீரர்கள் பலர் வெளியில் காத்திருப்பதால், இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும் கூட தங்களது இடம் பறிபோய்விடுமோ என்ற பயம் வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உடனடியாகக் கவனித்துச் சரிசெய்ய வேண்டும் என்று கார்த்திக் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல், சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோருக்குப் போதிய வாய்ப்புகள் வழங்கப்படாததால் அவர்கள் தங்களது நம்பிக்கையை இழந்துள்ளதாக அஸ்வினும், கைஃபும் சுட்டிக்காட்டியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் வீரர்களின் மன உறுதியைப் பாதிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் அதனால் ஏற்படும் குழப்பங்கள் இந்திய அணியின் ஒட்டுமொத்த செயல்திறனையும், வீரர்களின் மனநிலையையும் பாதிக்கக்கூடும் என்பதால், பிசிசிஐ உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது குறித்து பிசிசிஐ என்ன முடிவெடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version