சந்தையில் இருந்து வாங்கி வரும் கொத்தமல்லி இலைகள் சில நாட்களிலேயே வாடி, நிறம் மாறிப் போய்விடுகின்றனவா? இனி கவலை வேண்டாம். இந்த எளிய முறையைப் பின்பற்றினால், நீங்கள் வாங்கும் கொத்தமல்லி இலைகளை 5 வாரங்கள் வரை புதியது போலப் பாதுகாக்கலாம்.
பொதுவாக, நாம் கொத்தமல்லி இலையை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைப்பதே அவை விரைவில் வாடிப் போவதற்கு முக்கியக் காரணம். பிளாஸ்டிக் பை, கொத்தமல்லி இலைகள் வெளியிடும் 'எத்திலீன்' என்ற இயற்கை வாயுவையும், ஈரப்பதத்தையும் பைக்குள்ளேயே தங்கிவிடச் செய்கிறது. 'போஸ்ட் ஹார்வெஸ்ட் பயாலஜி அண்ட் டெக்னாலஜி' ஆய்வின்படி, இந்த எத்திலீன் வாயு கொத்தமல்லி இலையின் பச்சையத்தை வேகமாக அழித்து, அதை மஞ்சள் நிறமாக மாற்றி விரைவாக அழுகச் செய்துவிடும்.
மாறாக, அலுமினியம் ஃபாயில் (Aluminium Foil) பயன்படுத்தி கொத்தமல்லி இலையைச் சேமித்து வைப்பதன் மூலம், அவற்றை 3 முதல் 5 வாரங்கள் வரை கெட்டுப்போகாமல் புதியது போலப் பாதுகாக்க முடியும். அலுமினியம் ஃபாயில், பிளாஸ்டிக் பைகளைப் போல காற்றை முழுமையாக அடைக்காது. ஃபாயிலின் மடிப்புகளில் உள்ள சிறு இடைவெளிகள் வழியாக, தேவையற்ற ஈரப்பதமும் எத்திலீன் வாயுவும் மெதுவாக வெளியேறிவிடும்.
அதே நேரத்தில், கொத்தமல்லி இலைகள் முற்றிலும் காய்ந்து போகாமல், அவற்றுக்குத் தேவையான மிதமான ஈரப்பதத்தையும் குளுமையையும் ஃபாயில் தக்கவைத்துக் கொள்ளும். இதனால், கொத்தமல்லி இலைகள் நீண்ட நாட்களுக்குப் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
கொத்தமல்லி இலையை ஃபாயிலில் சேமிக்கும் முறை மிகவும் எளிமையானது. முதலில், கொத்தமல்லி இலையை சேமித்து வைப்பதற்கு முன் நீரால் கழுவக் கூடாது. பின்னர், கொத்தமல்லி கட்டை அலுமினியம் ஃபாயிலால் இறுக்கமாகச் சுற்ற வேண்டும். ஆனால், அதன் இரு முனைகளையும் லேசாகத் திறந்து வைக்க வேண்டும். இந்தச் சிறிய இடைவெளி வழியாகத்தான் எத்திலி ன் வாயு வெளியேறும்.
இவ்வாறு ஃபாயிலில் சுற்றப்பட்ட கொத்தமல்லி இலையை ஃப்ரிட்ஜில் உள்ள கிரிஸ்பர் டிராயரில் வைக்க வேண்டும். ஃப்ரிட்ஜின் கதவு பக்கத்தில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், எத்திலீன் வாயுவை அதிகம் வெளியிடும் ஆப்பிள், வாழைப்பழம், தக்காளி போன்ற பழங்களுக்கு அருகில் கொத்தமல்லி இலையை வைக்கக் கூடாது.
சரியான முறையில் ஃபாயில் சுற்றி, 0 முதல் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்தால், கொத்தமல்லி இலைகள் 3 முதல் 4 வாரங்கள் வரை மிகச் சிறந்த தரத்துடன் இருக்கும். உகந்த சூழ்நிலையில், இவை 5 முதல் 7 வாரங்கள் வரை கூட கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எளிய குறிப்பைப் பின்பற்றி, உங்கள் கொத்தமல்லி இலைகளை நீண்ட நாட்களுக்குப் புத்துணர்ச்சியுடன் வைத்திருங்கள்.

