கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாணியம்பாளையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பெற்ற மகனையே துடிதுடிக்க அடித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வாணியம்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் குணால். கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய குணால், கஞ்சா மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, தனது நண்பர்களுடன் சுற்றித் திரிந்து வந்துள்ளார். இதுகுறித்து அவரது தந்தை வெங்கடேசன் பலமுறை கண்டித்தும், குணால் தனது தவறான பழக்கவழக்கங்களில் இருந்து திருந்தவில்லை.
தொடர்ந்து மகன் திருந்தி வாழாததால், பொறுமையிழந்த தந்தை வெங்கடேசன், கடும் ஆத்திரத்திற்கு ஆளாகியுள்ளார். சம்பவத்தன்று இரவு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மகன் குணாலை, கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் குணாலின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
உடனடியாக, படுகாயமடைந்த குணாலை சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குணால் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குணாலின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பெற்ற மகனைக் கொடூரமாக கொலை செய்த தந்தை வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

