அதிமுகவில் பிளவு: கே.சி.வீரமணி திடீர் ஆதரவு – ஈ.பி.எஸ்.க்கு ஷாக்!

அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி தலைமையில் இரண்டு அணிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, சட்டமன்றத்தில் திமுகவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். இவருக்கு ஆதரவாக 25 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த அதிரடி முடிவால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கே.சி.வீரமணி எம்.எல்.ஏ.வை திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார். அவருக்கு பதிலாக டாக்டர் பசுபதி புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கே.சி.வீரமணி ஜோலார்பேட்டையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய கே.சி.வீரமணி, '21 ஆண்டுகளாக அதிமுகவில் பணியாற்றி, அமைச்சர் பதவி, மாவட்ட செயலாளர் என பல பொறுப்புகளை வகித்தேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுகவுடன் கூட்டணி வைக்குமாறு பொதுச்செயலாளர் கூறுவது மன வருத்தத்தை அளிக்கிறது. கடந்த தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் டெபாசிட் கூட பெறவில்லை. மக்களின் பணிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கில், ஆளும் கட்சியுடன் இணைந்தால் தான் சாத்தியம் என்பதால் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தேன். நான் உயிருள்ளவரை அதிமுக தொண்டன்தான், என் சின்னம் இரட்டை இலை, என் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். கட்சி பதவியில் இருந்து நீக்கப்படுவேன் என தெரிந்தும் இந்த முடிவை எடுத்தேன்' என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், 'புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளருடன் அனைவரும் பயணிக்க வேண்டும். நானும் கட்சி பதவியை விட்டு, அதிமுக தொண்டனாக அவருடன் இணைந்து கட்சியை வளர்க்க பாடுபடுவேன். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முன்பு திமுக கோட்டையாக இருந்தது. நான் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, தொண்டர்களின் உழைப்பால் அதிமுக கோட்டையாக மாறியது. புதிய மாவட்ட செயலாளருக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அதிமுகதான் எனக்கு முக்கியம். எடப்பாடிதான் எங்கள் தலைவர். அவர் பின்னால் தான் இருக்கிறோம். இதுதான் எங்கள் நிலைபாடு. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியுடன் பயணிப்போம்' என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version