அதிமுகவில் இருந்து விலகிய கே.ஏ.கே.முகில்: இபிஎஸ்-க்கு ஷாக்

அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த கே.ஏ.கே.முகில்

அதிமுகவில் இருந்து விலகுவதாக கே.ஏ.கே.முகில் அறிவித்துள்ளது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த மூத்த அரசியல்வாதி கே.ஏ.கிருஷ்ணசாமியின் மகனான இவர், அதிமுக அம்மா பேரவையின் இணைச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார்.

தனது விலகல் குறித்து கே.ஏ.கே.முகில் வெளியிட்டுள்ள கடிதத்தில், 'கனத்த இதயத்துடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் மற்றும் நான் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாகத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். திராவிட இயக்கத்துடனும், அதிமுகவுடனும் தனது குடும்பத்தின் தொடர்பு ஆழமாக வேரூன்றியிருப்பதாகவும், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் இரு முக்கியமான கட்டங்களுக்குப் பங்களித்த பெருமை தனது குடும்பத்திற்கு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

தனது தந்தை கே.கே. கிருஷ்ணசாமி, அதிமுக தொடங்கியபோது தலைவருக்கு பக்கபலமாக இருந்தவர், கட்சியின் முதல் அமைப்புச் செயலாளராகப் பணியாற்றியவர், கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான 'தென்னகம்' இதழின் ஆசிரியராகவும் வெளியிட்டாளராகவும் இருந்தவர் என்றும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் சுமார் பதினைந்து ஆண்டுகள் அமைச்சராகப் பணியாற்றியவர் என்றும் முகில் நினைவு கூர்ந்தார். மேலும், தனது தந்தையின் மூத்த சகோதரர் கே.கே. மதியழகன், பேரறிஞர் அண்ணாவுடன் தி.மு.க.வின் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராக இருந்தவர், தமிழ்நாடு அமைச்சராகவும், சட்டமன்றத் தலைவராகவும் பணியாற்றியவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

'அரசியல் வாழ்க்கை என்பது ஒரு சிறப்புரிமை அல்ல, ஒழுக்கத்துடனும், விசுவாசத்துடனும், கருணையுடனும் சுமக்க வேண்டிய ஒரு பொறுப்பு' என்பதை தான் பிறந்து வளர்ந்த சூழலிலேயே கற்றுக்கொண்டதாக அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு, புரட்சித் தலைவி ஜெயலலிதா தன்னை போயஸ் கார்டனுக்கு அழைத்ததாகவும், அங்கு தன்னை கட்சியின் எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக நியமித்து, 'உன் தந்தை கட்சியிலும் மக்களிடத்திலும் நன்மதிப்பைப் பெற்றவர். அவர் பெயரைக் காப்பாற்றும் விதத்தில் சிறப்பாக செயல்பட்டு மக்கள்பணி ஆற்றவேண்டும்' என்று வாழ்த்தியதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வார்த்தைகள் இன்றும் தனது அரசியல் வாழ்க்கையின் அஸ்திவாரமாக இருப்பதாகவும், அதன் பின்னர் மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளராகவும், அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதாகவும், மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாடாளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி மற்றும் மாவட்டக்கழகம் சார்ந்த பொறுப்புகளும் தனக்கு வழங்கப்பட்டதாகவும், அனைத்திலும் உண்மையோடும் விசுவாசத்தோடும் பணியாற்றிய மன நிறைவு தனக்கு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

புரட்சித் தலைவியின் மறைவுக்குப் பிறகு, தங்களது தலைமையின் கீழ் தனது அரசியல் பொறுப்புகளைத் தொடர்ந்ததாகவும், தற்போது கட்சியிலிருந்து விலகும் இந்த முடிவு தனது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா, மற்றும் இந்த இயக்கத்தைத் தாங்கி வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் மீதான தனது நன்றி எப்போதும் மாறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பொது வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், இந்தப் பயணம் தனக்கு அளித்த மதிப்புகளும் பாடங்களும் வழிகாட்ட, தமிழ்நாட்டு மக்களுக்குச் சேவை செய்வதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருப்பேன் என்றும் கே.ஏ.கே.முகில் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த திடீர் விலகல், அதிமுகவில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version