தமிழகத்தில் ஆளும் தவெக அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்குள் 20,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ளது. இதே நிலை நீடித்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் சுமை 20 லட்சம் கோடியாக உயரும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், 2026-27 ஆம் நிதியாண்டிற்கான நிதி மேலாண்மை பாதையை சரிசெய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இடைக்கால அறிக்கையை விட, தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சொந்த வரி வருவாய் 2,839 கோடி ரூபாய் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்திற்கான நிதியைப் பெறுவதற்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது மட்டும் போதாது என்றும், பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். 'பேசாமல் செயல்படுவோம்' என்பது வரவேற்கத்தக்கது என்றாலும், சில விஷயங்களில் தீர்வு காண நேரடி பேச்சுவார்த்தை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அதிமுக ஆட்சியில் 100% பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போதைய தவெக ஆட்சியில் பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், அவற்றை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 'உழவன் செயலி' திட்டத்தையும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
தொழில் வளர்ச்சியில் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவுடன் ஒப்பிடுகையில் தமிழகம் முன்னேற வேண்டுமெனில், விமான நிலையங்கள் அவசியம் என்றும் அவர் கூறினார். பழைய பேருந்துகளை மாற்றி, புதிய ஏசி பேருந்துகளை முழுமையாக அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை என்றும், சாதாரண பேருந்துகளை மாற்றி கொடுத்தாலே மக்கள் பாராட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.
தற்போதைய தவெக அரசின் முக்கிய சாதனையாக 'குதிரை பேரம்' தான் உள்ளது என்றும், இந்த ஆண்டு 1000 பேருந்துகள் வாங்குவதாகக் கூறியது, ஆண்டு முடிந்துவிட்ட நிலையில் இயலாத காரியம் என்றும் அவர் விமர்சித்தார். அதிமுக மற்றும் திமுக ஆட்சிகளிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் கடன் சுமை 13 லட்சம் கோடியாகவும், வரலாறு காணாத வருவாய் பற்றாக்குறை மற்றும் அதிக வட்டி சுமையுடனும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பட்ஜெட்டில் நிதி மேலாண்மையை சரிசெய்யும் திட்டங்கள் இல்லை என்றும், ஓய்வூதிய திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டதா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
