சட்டம் ஒழுங்கை சீர்செய்யுங்கள்: முதல்-அமைச்சர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மதுரை கீழமாத்தூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த த.வெ.க. நிர்வாகி கைது, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை, தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறான முறையில் பார்த்த த.வெ.க நிர்வாகி கைது, திருவொற்றியூரில் நள்ளிரவில் மின்துறை உதவிப் பொறியாளர் வீட்டை ஆளும் த.வெ.க.வினர் மிரட்டியது போன்ற செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று பெய்த மழையால் பல இடங்களில் தேங்கியிருந்த மழைநீரில், இரயில்வே சுரங்கப் பாதையை காரில் கடக்க முயன்ற கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசு உடனடியாக மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் இரண்டு விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

'சிறப்பான ஆட்சியை தருவேன், மாற்றம் கொண்டு வருவேன்' என்று முதல்வர் வசனம் பேசுவதாகவும், ஆனால் ஒவ்வொரு நாளும் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்து கொண்டிருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியிலும் ஏமாற்றம்தான் மிஞ்சுவதாகவும், ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மதுரை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகவும், அரசு ஊழியர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டும் போக்கு தொடர்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முந்தைய ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்களுக்கு பதில் சொல்லாமல், செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வர் தான் இப்போதும் வாய்த்துள்ளதாகவும், ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக ஈடுபட்டது போல, இன்றைய ஆளுங்கட்சி இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் கோட்டைக்கு வருவது, கேரியரில் மதிய உணவு சாப்பிடுவது போன்ற மாற்றங்களை இவர்கள் கட்டமைக்கும் வேளையில், தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவது குறித்தும், தங்கள் கட்சியினர் பொறுப்புணர்வின்றி அதிகார வெறியாட்டம் போடுவது குறித்தும் முதல்வர் பேசுவாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக மக்கள் மீது அக்கறை இருந்தால், அவர்களை காப்பாற்ற சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முதல்வரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version