90 வயது மாமியாரை சுமந்து சென்ற மருமகள்: வங்கிக்கு 9 கி.மீ பயணம்

சத்தீஸ்கர் மாநிலம், சுர்குஜா மாவட்டத்தில் உள்ள மைன்பாட் பழங்குடியின கிராமத்தில் வசிக்கும் சுக்மானியா பாய் என்ற பெண்மணி, தனது 90 வயது மாமியாரை முதுகில் சுமந்தபடி, சுட்டெரிக்கும் வெயிலில் 9 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார். காட்டுப் பாதைகள் மற்றும் ஓடைகளைக் கடந்து அவர் இந்த துயரப் பயணத்தை மேற்கொண்டது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

வங்கியில் ஓய்வூதியம் (சுமார் ₹1,500) பெறுவதற்கு, பயனாளிகள் நேரில் வந்து கைரேகை அல்லது அடையாளச் சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறையே இதற்குக் காரணம். இதனால், கடந்த சில மாதங்களாக சுக்மானியா பாய் தனது மாமியாரை இவ்வாறு சுமந்து சென்று ஓய்வூதியத்தைப் பெற்று வருகிறார். இப்பகுதியில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் இந்த அவலம் நீடிப்பதாகக் கூறப்படுகிறது.

முன்பு ஓய்வூதியப் பணம் கிராமங்களிலேயே நேரடியாக வழங்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது அந்த நடைமுறை நிறுத்தப்பட்டதால் இத்தகைய சிரமங்களுக்கு ஆளாக நேரிடுவதாகவும் அப்பெண் வேதனை தெரிவித்துள்ளார். 'டிஜிட்டல் இந்தியா' மற்றும் 'மக்களைத்தேடி நலத்திட்ட உதவிகள்' போன்ற அரசின் அறிவிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், தொலைதூரக் கிராமப்புறங்களில் வாழும் முதியவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்குக் கூட இன்றும் எவ்வளவு கடுமையாகப் போராட வேண்டியுள்ளது என்பதை இந்த காணொலி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இந்தச் சம்பவம், அரசின் நலத்திட்டங்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. குறிப்பாக, போக்குவரத்து வசதி இல்லாத தொலைதூரப் பகுதிகளில் உள்ள முதியோர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. சுக்மானியா பாயின் இந்த செயல், பலரின் மனதை நெகிழ வைத்துள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version