மின்வெட்டு: திமுக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்து வருவதாகவும், இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மின்சாரம் போனது… இன்னும் வரவில்லை' என்ற வாக்கியம் தமிழகத்தின் பல நகரங்கள், கிராமங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மக்கள் மத்தியில் அதிகமாக உச்சரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். கோடை வெயிலுடன் அறிவிக்கப்படாத மின் தடையும் அதிகரித்துள்ள நிலையில், மின் தேவை வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் வீடுகள், சிறு தொழில்கள், விவசாயம், மாணவர்களின் படிப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தின் மின் தேவை 2026-27ஆம் ஆண்டில் 23,013 மெகாவாட் வரை செல்லும் என்று மத்திய மின்சார ஆணையத்தின் கணிப்பு தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடையில் மின் தேவை அதிகரிப்பது அனைவருக்கும் தெரிந்ததே. புதிய தொழிற்சாலைகள், மின்சார வாகனங்கள் அதிகரிப்பு, புதிய வீடுகள், வணிக வளாகங்கள் என மின் பயன்பாடு பல மடங்கு உயரும் நிலையில், எதிர்காலத் தேவைக்கேற்ப மின் உற்பத்தி, கொள்முதல், சேமிப்பு வசதிகள், துணை மின் நிலையங்கள் போன்றவற்றில் முன்கூட்டியே போதுமான திட்டமிடல் ஏன் நடக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

சமூக ஊடகங்களில் தினமும் நூற்றுக்கணக்கான பதிவுகள், இரவு 11 மணிக்கு மின்தடை, குழந்தைகள் தூங்க முடியாமல் தவிப்பது, ஆன்லைன் தொழில்கள் பாதிப்பு, சிறு தொழிற்சாலைகள் இயங்காதது, விவசாய பம்ப் செட் மோட்டார்கள் இயங்காதது என பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன. அமைச்சர்கள் 'பீஸ் கேரியர் திருட்டு' என விளக்கம் அளிப்பதாகவும், ஆனால் 'தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் பீஸ் கேரியர் திருட்டு போனதா?' என மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். ஒரு மணி நேர மின்தடை என்பது தொழிற்சாலைகளில் உற்பத்தி இழப்பு, விவசாயிகளின் பயிர் பாதிப்பு, மாணவர்களின் கல்வி பாதிப்பு, சிறு வணிகர்களின் வருமான இழப்பு, மருத்துவ சேவைகளுக்கு சிக்கல் என பல அடுக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மின் தடைக்கான காரணம் பற்றிய விவாதம் அல்ல, மாறாக மாவட்ட வாரியாக உண்மையான தரவுகள் வெளியிடப்பட வேண்டும். எவ்வளவு மின் தேவை, எவ்வளவு உற்பத்தி, எவ்வளவு கொள்முதல், எந்த பகுதிகளில் அதிக மின் தேவை என்பதை அறிந்து அதை உடனே சரிசெய்யப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. தற்போதைய திமுக அரசு, கடந்த ஆட்சியின் மீட்சியாகவே இருக்கிறது என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். குறிப்பாக, கடந்த ஆட்சியில் மின்தடை ஏற்படும்போதெல்லாம் அதற்கு அணில்கள் காரணம் என்று சொல்லப்பட்டது. தற்போதைய திமுக ஆட்சியில், மின் கடத்தி கட்டை (பீஸ் கேரியர்) திருடு போவதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுபோன்ற சால்ஜாப்பு பேச்சுகளைக் கைவிட வேண்டும். மின்சாரம் என்பது வெறும் ஒரு வசதி மட்டுமல்ல; அது ஒரு மாநிலத்தின் வளர்ச்சி, தொழில், கல்வி, விவசாயம், வேலை வாய்ப்பு மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையை இயக்கும் உயிர்நாடி. எனவே, மின் தடை பற்றி பொதுமக்களிடம் கூறுவதற்கு காரணங்களைத் தேடி நேரத்தை செலவழிக்காமல், தடையில்லா மின்சாரம் வழங்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்' என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version