அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஆதரவு அளிக்கும் வகையில், இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டு ஆணையை ஓராண்டிற்கு நீட்டித்து தவெக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த திட்டத்தை கடந்த 03.11.2024 அன்று நடந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும், தென் தமிழகத்தை பாழ்படுத்தும் முயற்சி என்றும், அபாயம் விளைவிக்கும் நாசகார நச்சுத் திட்டம் என்றும் குறிப்பிட்டு, இதனை கைவிட வலியுறுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார். தற்போது அந்த நிலைப்பாட்டில் என்ன மாற்றம் வந்துவிட்டது என்றும், ஆட்சிக்கு வருவதற்கு முன் நாசகார நச்சுத் திட்டமாக இருந்தது, இப்போது நன்மை பயக்கும் நலத்திட்டம் ஆகிவிட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலூர் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் பிரச்சனையை சட்டமன்றத்தில் எழுப்பி, பல ஆதாரப்பூர்வமான கேள்விகளை அரசை நோக்கி கேட்டு மக்களுக்காக நின்றவன் நான் என்றும், 'மக்கள் பிரச்சனைக்கு உயிரைக் கொடுத்து காப்பாற்றுவோம்' என்று சட்டப்பேரவையிலேயே முழங்கினேன் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். அடுத்த கட்சி MLA-க்களை வலைவீசி, குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம், தங்கள் “Sofa கூட்டணி”க்குள் நுழைப்பதற்கும் இடையே இப்படி ஒரு அரசாணை வெளியிட்டால் அதனை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தீர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மக்களுக்கான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, மக்களுடன் நிற்பது மட்டும் தான் அதிமுகவின் ஒரே பணி என்றும், அது ஒருநாளும் மாறாது என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார். நச்சுத் திட்டம் என்று இன்றைய ஆளுங்கட்சி சொன்ன திட்டத்தை இப்போது செயல்படுத்த முனைவது குறித்த காரணத்தை இன்றைய முதலமைச்சர் விளக்க வேண்டும் என்றும், உள்ளபடியே அது நச்சுத் திட்டம் தான் என்றால் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version