அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற 'சோத்பீஸ்' ஏல மையத்தில், 'கஸ்' எனப் பெயரிடப்பட்ட டைரனோசொரஸ் ரெக்ஸ் (T. rex) வகை டைனோசர் எலும்புக்கூடு ஒன்று, சுமார் 482 கோடி ரூபாய் (50.1 மில்லியன் டாலர்) என்ற பிரம்மாண்ட தொகைக்கு ஏலம் போயுள்ளது.
வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு ஏலம்போன டைனோசர் புதைபடிவம் என்ற புதிய உலக சாதனையை 'கஸ்' எலும்புக்கூடு படைத்துள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற விறுவிறுப்பான ஏலத்தில், 7 பேர் போட்டியிட்ட நிலையில், வெறும் 10 நிமிடங்களுக்குள் இந்த அரிய வரலாற்றுப் புதைபடிவம் ஏலம் எடுக்கப்பட்டது. இது, தனியார் சேகரிப்பாளர்களிடையே இதுபோன்ற அரிய வரலாற்றுப் புதைபடிவங்களுக்கு இருக்கும் பெரும் வரவேற்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஏலம், அறிவியல் அறிஞர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஒரு புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிக்கும், பொதுமக்களின் பார்வைக்கும் பயன்பட வேண்டிய இத்தகைய முக்கியப் புதைபடிவங்கள், தனியாரின் சொந்த உடைமையாக மாறுவது குறித்து அவர்கள் தங்களது கவலையைத் தெரிவித்துள்ளனர்.
'கஸ்' டைனோசர் எலும்புக்கூட்டின் சிறப்பம்சங்கள் தனித்துவமானவை. இதுவரை கண்டறியப்பட்ட டைரனோசொரஸ் ரெக்ஸ் வகை எலும்புக்கூடுகளிலேயே, மிக முழுமையான வடிவம் கொண்ட ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த எலும்புக்கூட்டில் மொத்தம் 183 புதைபடிவ எலும்புகள் உள்ளன. இது சுமார் 63% முழுமையான வடிவம் கொண்டது.
அமெரிக்காவின் சவுத் டகோட்டாவில் உள்ள ஒரு மாட்டுப் பண்ணையில் கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டது. 38 அடி (11.6 மீட்டர்) நீளம் கொண்ட இந்த எலும்புக்கூடு, அறிவியல் உலகிற்குத் தெரிந்த மிகப்பெரிய டி. ரெக்ஸ் மாதிரிகளில் ஒன்றாகும். இதன் காரணமாகவே ஏலச் சந்தையில் இது இவ்வளவு பெரிய மதிப்பைப் பெற்றுள்ளது.
விஞ்ஞானிகளின் கணிப்பின்படி, பூமி வெப்பமான காலநிலையைக் கொண்டிருந்த 'லேட் கிரெட்டேசியஸ்' (Late Cretaceous) காலத்தில், அதாவது சுமார் 7.2 கோடி முதல் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த டைனோசர் வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த எலும்புக்கூட்டை வாங்கிய நபரின் விவரங்களை ஏல மையமான 'சோத்பீஸ்' வெளியிடவில்லை. இருப்பினும், இது போன்ற புதைபடிவங்களைத் தனிநபரின் சொந்தச் சொத்தாகக் கருதும் ஒரே நாடு அமெரிக்கா மட்டும்தான் என சோத்பீஸ் ஏல மையத்தின் அறிவியல் மற்றும் இயற்கை வரலாற்றுப் பிரிவுத் தலைவர் காசாண்ட்ரா ஹேட்டன் (Cassandra Hatton) ஏலத்திற்கு முன்பு ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்திடம் விளக்கினார். அமெரிக்க சட்டப்படி, ஒரு நிலத்தின் உரிமையாளருக்கு அதன் அடியில் கிடைக்கும் புதைபடிவங்களும் சொந்தம் என்றும், அதை விற்பனை செய்யும் உரிமையும் உண்டு என்றும் அவர் கூறினார்.
இதற்கு முன்பு, கடந்த 2024-ல் 'அபெக்ஸ்' (Apex) என்று பெயரிடப்பட்ட ஸ்டெகோசொரஸ் வகை டைனோசர் புதைபடிவம் 44.6 மில்லியன் டாலருக்கு ஏலம் போனதே உலக சாதனையாக இருந்தது. அதை ஹெட்ஜ் ஃபண்ட் பில்லியனரான கென் கிரிஃபின் என்பவர் வாங்கியிருந்தார். தற்போது 'கஸ்' அந்த சாதனையை முறியடித்துள்ளது. தனியார் சேகரிப்பாளர்கள் போட்டிப்போட்டு விலையை உயர்த்தினாலும், மிக அரிதான அறிவியல் சான்றுகள் பொதுமக்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலை ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் தொடர்ந்து நீடிக்கிறது.
