எல் நினோ தாக்கத்தால் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வழக்கமாக மழைக்காலங்களில் தூய்மையான தண்ணீரில் உருவாகும் 'ஏடிஸ்' வகை கொசுக்கள் மூலம் டெங்கு பரவுகிறது. ஆனால், இந்த ஆண்டு பருவநிலை மாற்றம் காரணமாக, வழக்கமான பருவமழைக்கு முன்னரே டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடுகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரில், மழை இல்லாத காலங்களிலும் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்டு டெங்கு பரவ வழிவகுக்கின்றன. குடங்கள், வாளிகள், தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் மட்டுமல்லாமல், பூந்தொட்டிகளின் அடிப்பகுதி, பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள் போன்ற சிறிய இடங்களிலும் தண்ணீர் தேங்கினாலும் கொசுக்கள் உற்பத்தியாகி பெருகும் அபாயம் உள்ளது. மேலும், ஏடிஸ் கொசுக்களின் முட்டைகள் தண்ணீர் வற்றிவிட்ட பிறகும் பல மாதங்கள் வரை உயிருடன் இருக்கும் தன்மை கொண்டவை.
தற்போது சென்னையில் பகல் நேரங்களில் கடும் வெப்பமும், மாலை நேரங்களில் திடீர் மழையும் மாறி மாறி நீடித்து வருகிறது. இந்த திடீர் மழையால் மழைநீர் தேங்குவதுடன், வீடுகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது கொசு உற்பத்தியை மேலும் அதிகரிக்கிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்கள், காய்ச்சல் போன்ற உடல்நலப் பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால், கொசு உற்பத்தி அதிகரிப்பதால் டெங்கு பரவும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
எனவே, பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருப்பதும், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதும் டெங்கு பரவலைத் தடுப்பதற்கு மிகவும் அவசியமானதாகும். டெங்கு பாதிப்பு குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், பாதிப்புகள் அனைத்தும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்றியமையாதது.

