மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் (MRB) நடத்திய சுகாதார ஆய்வாளர் (நிலை-II) பணியிடங்களுக்கான தேர்வு, டிசம்பர் 7, 2025 அன்று அவசர அவசரமாக நடத்தப்பட்டது. இந்த கணினி வழித் தேர்வில், தேர்வு மையங்களில் விதிமீறல்கள், செல்போன் பயன்பாடு, கண்காணிப்பாளர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற முறைகேடுகள், வினாத்தாள் கசிவு போன்ற பல குற்றச்சாட்டுகளைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்த முறைகேடுகள் குறித்து, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், இதுவரை விசாரணை முழுமையடையவில்லை. இந்தச் சூழலில், முறைகேடுகள் நடந்த நிலையிலேயே, தேர்ச்சி பெற்றவர்கள் என்ற பட்டியலை வைத்து, தமிழக அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளது. இது முற்றிலும் தவறானது என 'வீ தி லிடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு கூறலாம். ஆனால், இத்தனை முறைகேடுகள் நடந்துள்ளதன் காரணமாக, உண்மையாகக் கடினமாகப் படித்துத் தேர்வெழுதிய இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை, உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையாக எடுத்துரைத்திருக்க வேண்டும். மேலும், சிபிசிஐடி விசாரணை நிலுவையில் இருப்பதையும் அரசு குறிப்பிட்டிருக்க வேண்டும்.
தேர்வில் முறைகேடுகள் நடைபெற்ற சூழலில், பணி நியமன ஆணைகளை வழங்குவது, நேர்மையாகத் தேர்வு எழுதிய இளைஞர்களுக்குச் செய்யும் துரோகம் என்பதை தமிழக அரசு உணர வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது.
அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில், அனைத்து தேர்வு மையங்களின் சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்து, முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடந்த டிசம்பர் 7, 2025 அன்று நடைபெற்ற தேர்வை உடனடியாக ரத்து செய்து, கடுமையான கண்காணிப்புடன், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அரசு வேலைவாய்ப்பில் தகுதியும், நேர்மையும் மட்டுமே முதன்மையானதாக இருக்க வேண்டும். முறைகேடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். இந்த முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

