2027 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட்டை நீக்கிவிட்டு, சஞ்சு சாம்சனை புதிய கேப்டனாக நியமிக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் யோசனை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த மூன்று சீசன்களாக பிளே-ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து வருகிறது. தோனிக்கு அடுத்தபடியாக ருதுராஜ் கெய்க்வாட் மீது சிஎஸ்கே நிர்வாகம் முழு நம்பிக்கை வைத்து கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தது. ஆனால், அந்த நம்பிக்கை வீணானது.
கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடிய சிஎஸ்கே அணி, 10 அணிகள் கொண்ட புள்ளிப்பட்டியலில் வெறும் 8வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நீண்ட காலம் செயல்பட்ட சஞ்சு சாம்சன், இந்த முறை சிஎஸ்கே அணியில் இணைந்தார். கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன், 14 போட்டிகளில் 43.36 சராசரி மற்றும் 165.62 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2 சதங்கள், 1 அரைசதம் உட்பட மொத்தம் 477 ரன்களை குவித்தார். ஆனால், ருதுராஜ் கெய்க்வாட் 28.08 சராசரி மற்றும் 123.44 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ரன் குவிக்க முடியாமல் தடுமாறினார்.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய சடகோபன் ரமேஷ், 'சிஎஸ்கே அணி கேப்டனை மாற்ற நினைத்தால், சஞ்சு சாம்சனை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். அவர் ஒரு சிறந்த அணி வீரர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 66 போட்டிகளில் வழிநடத்தி, 33 வெற்றிகளுடன் 50 சதவீத வெற்றி விகிதத்தை அவர் வைத்துள்ளார். அவரது தலைமையில் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டி வரையிலும் சென்றது' என்று குறிப்பிட்டார்.
மேலும், நீண்ட காலம் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் விலகியுள்ள நிலையில், புதிய பயிற்சியாளரை நியமிப்பது உட்பட அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை சிஎஸ்கே நிர்வாகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கேப்டனை மட்டும் மாற்றினால் கோப்பையை வென்றுவிட முடியாது என்றாலும், அணியின் பழைய பொற்காலத்திற்கு திரும்ப இதுவே சரியான தருணம் என்றும் சடகோபன் ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். சிஎஸ்கே அணி மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்ப இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
