நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் செயலர் ககன்தீப் சிங் பேடி, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்களின் சேவையில் வெளிப்படைத்தன்மை மற்றும் கால தாமதமின்றி செயல்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி, ஆணையர்கள் தினசரி காலை 7 மணிக்கு முன்பாக களத்தில் ஆய்வு செய்ய வேண்டும். திடக்கழிவு மேலாண்மை, பொது கழிப்பறைகள், பஸ் நிலையங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து, அவை தூய்மையாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பணியாளர்களின் வருகைப் பதிவை தினசரி கண்காணித்து, தேவையற்ற விடுப்புகளை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலைகளில் படிந்துள்ள மண்ணை தினசரி அகற்றுவதை உறுதி செய்வதுடன், ரிசர்வ் சைட், நீர்நிலைகள், சாலையோரங்களில் மரம் வளர்த்து பசுமை பரப்பை உருவாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பூங்காக்களில் உள்ள குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள் நல்ல நிலையில் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். பழுதாகியுள்ள தெருவிளக்குகளை 24 மணி நேரத்திற்குள் சரி செய்ய வேண்டும்.
குடிநீர் விநியோகம் போன்ற மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகள் மற்றும் புகார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சரி செய்ய வேண்டும். கட்டிட அனுமதியில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், விதி மீறினால் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.