கோவை மாவட்டம் அன்னூரில் கொசு மருந்து தெளித்த பிறகு இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு பகுதியில் சமீபத்தில் மூன்று குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, டெங்கு பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக, அன்னூர் பேரூராட்சி நிர்வாகம் அன்னூர், சத்தி சாலை, உப்பு தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியை நேற்று தொடங்கியது. கழிவுநீர் கால்வாய்கள், குப்பைத் தொட்டிகள் மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களில் பணியாளர்கள் கொசு மருந்தை தெளித்தனர். மேலும், குடியிருப்புகளுக்கு உள்ளேயும் சென்று மருந்து அடித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று உப்பு தோட்டம் பகுதியில் கொசு மருந்து தெளிக்கப்பட்டபோது, அப்பகுதியைச் சேர்ந்த மோகன் (65) மற்றும் ராணி என்கிற பிரேமா (75) ஆகியோர் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். உயிரிழந்த மோகன் ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு காரணமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ராணி என்கிற பிரேமாவும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
குறைவான தண்ணீரில் அதிக அளவு கொசு மருந்தை கலந்து தெளித்ததாகக் கூறி அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். டெங்கு பாதிப்புள்ள பகுதிகளைச் சுற்றி 400 மீட்டர் தொலைவிற்கு கொசு மருந்து அடிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதன் பேரிலேயே இப்பணியில் ஈடுபட்டதாகவும், இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
செயல் அலுவலரின் இந்த விளக்கத்தால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், பேரூராட்சியின் அலட்சியப் போக்கைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் மேலும் கூறுகையில், 'உப்பு தோட்டம் பகுதியில் கடந்த 10 நாட்களில் 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாகவே மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. இந்த மருந்து டெங்கு பரவலைத் தடுப்பதற்கு மட்டுமே உதவும், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாது. உயிரிழந்த மோகன் அதிக குடிப்பழக்கம் காரணமாக விரைவில் இறந்துவிடுவார் என தனியார் மருத்துவமனை கூறியிருந்ததாகவும், ராணி நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இருப்பினும், பொதுமக்கள் கொசு மருந்து அடித்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறுகின்றனர்' என்று தெரிவித்தார்.

