கோவை அருகே சூலூரில் 10 வயது சிறுமி கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெற்றோருடன் வசித்து வந்த சிறுமி, கடைக்குச் சென்றபோது காணாமல் போன நிலையில், அவரது சடலம் அருகே உள்ள குளக்கரையில் மீட்கப்பட்டுள்ளது.
சிறுமி காணாமல் போனதை அடுத்து, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் உள்ள முட்புதரில் சிறுமியின் சடலம் கிடந்ததைக் கண்டறிந்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில், கார்த்திக் தப்பிக்க முயன்றபோது ஏற்பட்ட கால் முறிவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு குற்றவாளியான மோகன் ராஜ், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், மோகன் ராஜ் வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

