யார் அந்த ரத்தீஷ்? அவர் ஏன் துபாய்க்கு ஓடினார்? என்ற கேள்விகளை முதலமைச்சர் விஜய் எழுப்பியுள்ளார். டாஸ்மாக் நிர்வாகத்தில் பல அதிகாரிகளின் இடமாற்றங்களை இவர் தீர்மானித்ததாகவும், குறிப்பாக டி.ஆர்.ஓ. நிலை அதிகாரிகளின் இடமாற்றங்களில் இவரது தலையீடு இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், 'A central figure operating as an unauthorized power broker' என்று ரத்தீஷ் வர்ணிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அவரது உத்தரவின்படியே அப்போதைய டாஸ்மாக் மேலாண் இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி செயல்பட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளதை குறிப்பிட்டார். 'யார் இந்த ரத்தீஷ்? யாருக்கு நெருக்கமானவர்? நமது அரசு பொறுப்பேற்ற பிறகு இவர் ஏன் துபாயில் போய் ஒளிந்துகொண்டார்? இத்தனை வருடங்களாக யாருடைய உத்தரவின் பேரில் இவர் செயல்பட்டார்?' என முதலமைச்சர் விஜய் ஆவேசமாக கேள்விகளை எழுப்பினார். இதற்கு பதில் சொல்ல யாருமில்லை என்றும், 'கடவுளுக்கே வெளிச்சம்' என்றும் அவர் கூறினார்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி விசாகன் ஐஏஎஸ், முன்னாள் மண்டல மேலாளர் ராம துரைமுருகன், செந்தில் பாலாஜி, முன்னாள் அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர், ரத்தீஷ் ராஜ், மூலனூர் கார்த்தி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும், பார் உரிமையாளர்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகாரிகளுடன் சேர்ந்து சுமார் ரூ.17.27 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாகவும், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் டெண்டர் ஒதுக்குவதில் முறைகேடு நடந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் (FIR) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
