தமிழ்நாட்டின் சிறைச்சாலைகளில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக, அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் சில சிறைகளில் செல்போன் பயன்பாடு, போதைப்பொருள் கடத்தல், கைதிகளிடையே மோதல்கள், சிறை ஊழியர்களுக்கு மிரட்டல் போன்ற சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின. சமீப காலமாக சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இதனை இனி ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக உள்ளார். சிறை என்பது திருந்துவதற்கான இடமாக இருக்க வேண்டுமே தவிர, குற்றங்கள் தொடரும் இடமாக இருக்கக்கூடாது என்பதே அவரது நிலைப்பாடு.
இதற்காகவே, சிறை பாதுகாப்பை முழுமையாக ஆய்வு செய்து, அதனை நவீனமயமாக்குவதற்காக இந்த உயர்மட்ட குழு முதலமைச்சரால் அமைக்கப்பட்டது. இன்று முதலமைச்சரை சந்தித்த குழுவினர், தங்களது விரிவான ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளை அவரிடம் எடுத்துரைத்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகள், மாவட்ட சிறைகள், பெண்கள் சிறைகள், திறந்தவெளி சிறைகள் என அனைத்து வகை சிறைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, சிறைக்குள் செல்போன் சிக்னல்களை முடக்கும் ஜாமர் கருவிகள், CCTV கேமராக்கள், பாடி ஸ்கேனர்கள், மெட்டல் டிடெக்டர்கள் போன்றவற்றை நவீனப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், கைதிகளை சந்திக்க வருபவர்கள், அவர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்கள், உடைகள் போன்றவற்றை இன்னும் தீவிரமாக சோதனை செய்வது, சிறை ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அவர்களுக்கு நவீன பயிற்சி அளிப்பது, கைதிகளின் மனநலம் மற்றும் அவர்கள் திருந்தி வாழ்வதற்கான பயிற்சிகள், தொழில் பயிற்சிகள், கல்வி மேம்பாடு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
முதலமைச்சர் விஜய்யின் இந்த நேரடி கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல், தமிழ்நாட்டு சிறைச்சாலைகளை இந்தியாவிலேயே முன்மாதிரியான சிறைகளாக மாற்றும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உயர்மட்ட குழுவின் முழுமையான அறிக்கை விரைவில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் அடிப்படையில் அடுத்தடுத்து பல அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின் மூலம், தமிழ்நாட்டின் சிறைத்துறை சீர்திருத்தங்களில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கைதிகளின் மறுவாழ்வு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் இந்த நடவடிக்கைகள் அமையும் என நம்பப்படுகிறது.
